கோவிட்-19 பெருந்தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாடுகளில் இத்தாலியும் ஒன்று. இப்பெருந்தொற்றால் அந்நாட்டில் மட்டும் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். இதனால் அந்நாட்டில் நடைபெறவிருந்த அனைத்து விதமான விளையாட்டுப் போட்டிகளும் மார்ச் மாத தொடக்கத்திலிருந்தே ஒத்திவைக்கப்பட்டன.
இதையடுத்து, இத்தாலியில் வைரஸின் தாக்கம் குறைந்து வருவதால் அந்நாட்டு அரசு, ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் மிக முக்கியமான அந்நாட்டின் பிரபல கால்பந்து தொடரான சிரி ஏ தொடரை பார்வையாளர்களின்றி நடத்துவதற்கும் அனுமதியளித்துள்ளது.
இது குறித்து நேற்று (மே 28) இத்தாலி கால்பந்து கூட்டமைப்பு அலுவலர்கள், சிரி ஏ அலுவலர்கள், விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நடுவர்களுடனான நேரலை காணொலி கூட்டத்தின் சிரி ஏ தொடர் குறித்தான விவாதங்கள் நடைபெற்றன. அப்போது அதில் பேசிய இத்தாலி விளையாட்டுத் துறை அமைச்சர் வின்சென்சோ ஸ்படஃபோரா(Vincenzo Spadafora), சிரி ஏ குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
அந்த அறிவிப்பில், ‘இத்தாலி தனது கால்பந்து தொடர்களை மீண்டும் நடத்துவதற்கு ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அதன்படி, கரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த சிரி ஏ தொடரை ஜூன் 20ஆம் தேதி முதல் பார்வையாளர்களின்றி நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மற்ற கால்பந்து தொடர்களான சிரி பி, சிரி சி மற்றும் மகளிர் சிரி ஏ ஆகிய தொடர்களுக்கான தேதிகளும் விரைவில் அறிவிக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கரோனா வைரஸ் காரணமாக இத்தாலியில் நடப்பு சிரி ஏ சீசன் கால்பந்து போட்டி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், மே நான்காம் தேதியிலிருந்து அனைத்து அணிகளின் வீரர்களும் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என அந்நாட்டு பிரதமர் கியூசெப் கோன்டே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பன்டேஸ்லிகா: டிராவில் முடிந்த லீப்ஜிக் - ஹெர்தா ஆட்டம்!