சண்டிகரைச் சேர்ந்தவர் இந்திய கால்பந்து வீரர் சந்தேஷ் ஜிங்கன். தடுப்பாட்டக்காரரான இவர் இந்தியா அணியில் 2015இல் அறிமுகமானார். தடுப்பாட்டத்தில் எப்போதும் சுறுசுறுப்பாகவும், ஆக்ரோஷமாகவும் இருக்கும் இவர் 2014ஆம் ஆண்டிலிருந்து ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்காக விளையாடிவந்தார்.
இவருக்கென கேரளாவில் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தனது சிறப்பான தடுப்பாட்டத்தால் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை இருமுறை (2014,2016) இறுதிப்போட்டி வரை கொண்டு சென்றார். காயம் காரணமாக இவர் 2019-20 ஐஎஸ்எல் சீசனிலிருந்து வெளியேறியதால் கேரளா அணி ஏழாவது இடத்தைப் பிடித்தது.
தடுப்பாட்டத்தில் சிறந்து விளங்கும் வீரராக வலம்வரும் இவருக்கு, தங்கள் அணியில் விளையாடுமாறு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கிளப் அணிகள் வேண்டுகோள் விடுத்தன. குறிப்பாக, கடந்தாண்டு ஏஎஃப்சி கோப்பை தொடரில் இந்திய அணிக்காக இவர் விளையாடிய ஆட்டத்திறனைக் கண்டு கத்தாரில் உள்ள அல்-கரஃபா எஸ்சி அணி (Al-Gharafa SC) இவரை ஒப்பந்தம் செய்வதில் ஆர்வம் காட்டியது.
இதனால் ஆறு ஆண்டுகளாக கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்காக விளையாடிவந்த இவர், தற்போது அணியிலிருந்து விலகியுள்ளதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், இது குறித்து கேரளா பிளாஸ்ட்ர்ஸ் வட்டராத்தில் கூறியதாவது, "ஆம், சந்தேஷ் ஜிங்கன் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியிலிருந்து விலகியுள்ளார். அணிக்கும் அவருக்கும் இடையே பரஸ்பர ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவர் அணியிலிருந்து விலகியுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 26 வயதான சந்தேஷ் ஜிங்கன் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்காக அதிக போட்டிகளில் (76) விளையாடிய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: 'லா லிகா பட்டத்தை வெல்ல ரியல் மாட்ரிட் கடுமையாகப் போராடும்'