இந்திய கால்பந்து அணியில் தலைசிறந்த தடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக வலம்வருபவர் சந்தேஷ் ஜிங்கன். இவர் 2014ஆம் ஆண்டில் ஐஎஸ்எல் கால்பந்து தொடர் அறிமுகமானதிலிருந்து கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்காக விளையாடிவந்தார். ஒவ்வொரு சீசனிலும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் நட்சத்திர வீரராகவே திகழ்ந்துவந்தார்.
தனது சிறப்பான தடுப்பாட்டத்தால் சந்தேஷ் ஜிங்கன் ஐஎஸ்எல் தொடரில் கேரளா அணியை இரண்டு முறை (2014, 2016) இறுதிச் சுற்றுக்கு கொண்டுச் சென்றார். இதனிடயே, காயம் காரணமாக இவர் கடந்த 2019-20 சீசனிலிருந்து விலகினார். இதன் விளைவாக, கேரளா அணி புள்ளிகள் பட்டியலில் ஏழாவது இடத்தை பிடித்தது.
இதைத்தொடர்ந்து, இவரது ஆட்டத்திறனைக் கண்டு வெளிநாட்டைச் சேர்ந்த பல்வேறு கிளப் அணிகள் இவரை ஒப்பந்தம் செய்ய தீவிரம் காட்டிவருகின்றன. இந்நிலையில், ஆறு சீசன்களாக கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்காக விளையாடிவந்த இவர், தற்போது அணியிலிருந்து விலகியுள்ளார்.
இந்த நிலையில், இவரை கவுரவிக்கும் விதமாக கேரளா பிளாஸ்டர்ஸ் அணி இவர் அணிந்திருந்த ஜெர்சி எண்ணுக்கு (21) ஓய்வு வழங்க முடிவு செய்துள்ளது. இது குறித்து கேரளா பிளாஸ்டர் அணியின் உரிமையாளர், நிகில் பரத்வாஜ் வெளியிட்ட அறிக்கையில்,
"கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்காகவும் ரசிகர்களுக்காகவும் தனது அர்ப்பணிப்பையும், விஸ்வாசத்தையும் காட்டிய சந்தேஷ் ஜிங்கனுக்கு இந்த தருணத்தில் நாங்கள் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். வாழ்வில் ஒரு புதிய சவாலைத் தொடர சந்தேஷ் ஜிங்கன் எடுத்த முடிவை கேரளா பிளாஸ்டர்ஸ் அணி வரவேற்கிறது. மேலும் அவரது புதிய பயணத்திற்கு நாங்கள் வாழ்த்துகளை கூறுகிறோம். அணிக்காக அவர் செய்த பங்களிப்பிற்கு நன்றி செலுத்தும் விதமாக அவர் அணிந்திருந்த ஜெர்சி எண் 21ஐ நிரந்தரமாக ஓய்வு வழங்க முடிவு செய்துள்ளோம்" என குறிப்பிட்டிருந்தார்.
26 வயதான சந்தேஷ் ஜிங்கன் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்காக இதுவரை 76 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதன்மூலம், கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையோடு அவர் அணியிலிருந்து விலகியுள்ளார்.
இதையும் படிங்க: கால்பந்துலயே ஊறிப்போனவனால மட்டும் தான் இப்படியும் மாஸ்க் செய்ய முடியும்!