ஐஎஸ்எல் தொடரின் ஏழாவது சீசன் ரசிகர்களிம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆரவாரத்துடன் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற எஃப்சி கோவா - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
இந்நிலையில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எஃப்சி அணி - ஈஸ்ட் பெங்கால் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இப்போட்டியானது பாம்போலியத்திலுள்ள ஜிஎம்சி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மும்பை சிட்டி எஃப்சி:
ஒவ்வோரு ஆண்டும் நட்சத்திர வீரர்களைக் கொண்டு களமிறங்கும் மும்பை சிட்டி எஃப்சி அணி இதுவரை ஒருமுறை கூட ஐஎஸ்எல் கோப்பை வென்றதில்லை. இதனால் நடப்பு ஐஎஸ்எல் சீசனின் வீரர்கள் ஏலத்தின் போது நட்சத்திர வீரர்களை தன்பக்கம் இழுத்துள்ளது. மேலும் அணியின் பயிற்சியாளராக செர்ஜியோ லோபராவையும் நியமித்துள்ளது.
அதேசமயம் இந்த சீசனில் இதுவரை இரண்டு போட்டியில் விளையாடிவுள்ள மும்பை அணி ஒரு வெற்றி, ஒரு தோல்வியென மூன்று புள்ளிகளைப் பெற்று ஐஎஸ்எல் புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் முனைப்பில் மும்பை அணி விளையாடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ஈஸ்ட் பெங்கால்:
இந்தியாவின் பிரபலமான கால்பந்து கிளப்களின் ஒன்றான ஈஸ்ட் பெங்கால் அணி, இம்முறை ஐஎஸ்எல் சீசனில் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்த தயாராகிவருகிறது. தனது அறிமுக சீசனில் பங்கேற்கும் ஈஸ்ட் பெங்கால் அணி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் லிவர்பூல் அணியின் ஜாம்பவான் ராபி ஃபோலரை தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளதால், இந்த அணியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இருப்பினும் இந்த சீசனின் முதல் போட்டியில் ஏடிகே மோகன் பாகன் அணியுடன் மோதி தோல்வியைத் தழுவியது. இதனால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று, தனது முதல் வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்போடு ஈஸ்ட் பெங்கால் அணி செயல்படும் என ரசிகர்கள் அவாலுடன் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: உலக டிரையத்லான் தணிக்கைக் குழுவின் உறுப்பினராக இந்தியர் தேர்வு!