கரோனா பாதுகாப்பு சூழலுடன் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஏழாவது சீசன் கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஒடிசா எஃப்சி அணி - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை எதிர்கொண்டது.
பரபரப்புடன் தொடங்கிய இப்போட்டியின் தொடக்கம் முதலே ஒடிசா அணி அட்டக்கிங் ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கியது. இதன் பயணாக ஆட்டத்தின் 22ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியின் டியாகோ கோலடித்து அணியின் கோல் கணக்கை தொடக்கிவைத்தார்.
அதன்பின் முதல் பாதி ஆட்டத்தின் 45+2ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியின் பெஞ்சமின் லம்பாட் கோலடித்தார். இதன்மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமநிலையில் இருந்தன.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தின் 65ஆவது நிமிடத்தில், நார்த் ஈஸ்ட் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்திய க்வேசி ஆப்பியா கோலடித்து அசத்தினார்.
அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஒடிசா எஃப்சி அணியின் அலெக்சாண்டர் ஆட்டத்தின் 67ஆவது நிமிடத்தில் கோலடித்து அணியை தோல்வியிலிருந்து மீட்டார்.
இதனால் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா 2 கோல்களை அடித்து சமநிலையில் இருந்ததால், ஆட்டம் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க:‘ரஹானேவை நான்காம் வரிசையில் காண விரும்புகிறேன்’ - கவுதம் கம்பீர்