இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடரின் ஆறாவது சீசனுக்கான போட்டிகள் பல்வேறு நகரங்களில் விறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இதில், நேற்று அசாமின் கவ்ஹாக்தி நகரில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்.சி. - கொல்கத்தா (ஏ.டி.கே) ஆகிய அணிகள் மோதின.
மிகவும் பரபரப்பாக தொடங்கிய இந்த ஆட்டத்தின் இரண்டாவது நிமிடத்திலேயே நார்த் ஈஸ்ட் வீரர் ஆஷாமோஷ் கியான் அடிக்க முயன்ற கோலை கொல்கத்தாவின் கீப்பர் தடுத்து நிறுத்தினார். அதன் பின் சிறிது நேரத்திலேயே ஸ்ட்ரைக்கர் கியான் காயம் காரணமாக வெளியேற்றப்பட்டார். பின்னர் 11ஆவது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் டேவிட் வில்லியம்ஸ் கோல் அடித்து தங்கள் அணிக்கு முன்னிலைப் பெற்றுதந்தார்.
அதன்பின் 35ஆவது நிமிடத்தில் கொல்கத்தாவின் நட்சத்திரம் ராய் கிருஷ்ணா ஒரு கோல் அடித்து அசத்தினார். இதனால் முதல் பாதி ஆட்டம் 1-0 என முடிவடைந்தது. சொந்த மண்ணில் நார்த் ஈஸ்ட் அணி கோல் போட முடியாமல் திணறியது.
பின்னர் தொடங்கிய இரண்டாவது பாதி ஆட்டத்திலும் கொல்கத்தா அணி வீரர்கள் அட்டாக்கிங் முறையில் கோல் அடிக்க முயன்றனர். இறுதியாக ஒதுக்கப்பட்ட கூடுதல் நேரத்தில் ராய் கிருஷ்ணா மீண்டும் ஒரு கோல் அடிக்கவே கொல்கத்தா அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக நார்த் ஈஸ்ட் அணியை வீழ்த்தியது.
இதன்மூலம் ஏழு போட்டிகளில் ஆடியுள்ள கொல்கத்தா அணி 4 வெற்றி, இரண்டு டிரா, ஒரு தோல்வி என புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. அதே வேளையில் நடப்பு சீசனில் தோல்வியே அடையாமல் இருந்துவந்த நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்.சி. அணி முதல் தோல்வியை சந்தித்து நான்காவது இடத்தில் இருக்கிறது.
நேற்றைய போட்டியில் இரண்டு கோல்கள் அடித்து வெற்றிக்கு உதவிய கொல்கத்தா வீரர் ராய் கிருஷ்ணா நடப்பு சீசனில் அதிக கோல்கள் (6) அடித்த வீரர் என்ற பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
இதையும் படிங்க: மகளிர் ஐபிஎல் போட்டிகளுக்கு முயற்சிகள் எடுத்துவரும் 'கிரிக்கெட்டின் தாதா'