ஆசிய கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படவுள்ள 2022ஆம் ஆண்டிற்கான மகளிர் ஆசிய கோப்பை கால்பந்து தொடரை நடத்த பல நாடுகள் போட்டியிட்டன. இந்நிலையில் அத்தொடரை நடத்துவதற்கான உரிமையை ஆசிய கால்பந்து கூட்டமைப்பு இந்தியாவிற்கு வழங்கியுள்ளது.
இதையடுத்து 2022ஆம் ஆண்டிற்கான மகளிர் ஆசிய கோப்பை கால்பந்து தொடரை, இந்தியாவில் டிசம்பர் மாதத்தில் தொடங்கி, 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளது. மேலும் தொடரின் முக்கிய போட்டிகளை அகமதாபாத் மற்றும் நவி மும்பை ஆகிய நகரங்களில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி இத்தொடரில் 12 அணிகள் பங்கேற்கும் என்றும், அவை நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறும் என்றும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் மகளிர் உலகக்கோப்பை தொடர் 2023ஆம் ஆண்டு தொடங்கவுள்ளதால், இத்தொடரை 17 நாள்களுக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக ஏஎஃப்சி அறிவித்துள்ளது.
முன்னதாக ஃபிபா அண்டர்17 மகளிர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.