கரோனா வைரஸ் காரணமாக அனைத்து வகையான விளையாட்டு நடவடிக்கைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதில் தற்போது ஒரு சில தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலான விளையாட்டுப் போட்டிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.
இதனால் விளையாட்டு வீரர்கள் தங்களது குடும்பத்தொழிலை அல்லது தங்களுக்கு தெரிந்த வேலைகளைச் செய்துவருகின்றனர். அந்த வகையில் இந்திய மகளிர் கால்பந்து அணியின் ஃபார்வேர்டு வீராங்கனை அஞ்சு தமாங், தனது பெற்றோருடன் சேர்ந்து விவசாயத்தில் களமிறங்கியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் உள்ள தனது விவசாய நிலையத்தில் அஞ்சு தமாங், தனது குடும்பத்தாரோடு நெல் சாகுபடியை செய்துள்ளார். தற்போது அறுவடைக்குத் தயாரான நெற்கதிர்களை அஞ்சு தமாங் அறுவடை செய்வது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இது குறித்து அஞ்சு தமாங் கூறுகையில், “என்னுடைய சிறுவயது முதலே நான் இதனைச் செய்துவருகிறேன். ஆனால் இப்போதெல்லாம், போட்டிகளுக்காக வெவ்வேறு ஊர்களுக்குச் செல்ல வேண்டியுள்ளதால், என்னால் விவசாயத்தில் ஈடுபாடு காட்ட முடியவில்லை.
ஆனால் தற்போது கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், தற்போது மீண்டும் விவசாயத்தில் ஈடுபட எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் எனது குடும்பத்தினருக்கு நான் விவசாயத்தில் உதவுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:நட்சத்திர வீராங்கனை சிமோனா ஹெலப்பிற்கு கரோனா உறுதி!