ஸ்பெயின் கால்பந்து அணியின் கோல்கீப்பர் இகர் கேசில்லாஸ். தற்போது, போர்டோ என்ற போர்ச்சுகல் கால்பந்து கிளப் அணிக்காக இவர் விளையாடி வருகிறார். இந்நிலையில், போர்டோ நகரில் சக வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, இவருக்கு தீடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இவர் விரைவில் பூரணமாக குணமடைய வேண்டுமென மெஸ்ஸி, பேல் உள்ளிட்ட ஏராளமான கால்பந்து வீரர்கள் ட்விட்டரில் பதிவு செய்தனர். இந்நிலையில், இவரது உடல்நலம் சீராக உள்ளதாக இவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், எல்லாம் கட்டுக்குள் வந்துவிட்டது, நான் குணமடைய வேண்டும் என்று எனக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கேசில்லாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். மாரடைப்பில் இருந்து இவர் மீண்டு வந்ததால், அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
இவரது தலைமையின் கீழ் ஸ்பெயின் அணி, 2010ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரை வென்று அசத்தியது. இது மட்டுமின்றி, 2008, 2012 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்து யூரோ கோப்பையை வென்று சாதனைப் படைத்தது. இதைத் தவிர, இவரது கேப்டன்ஷிப்பில் ரியல் மேட்ரிட் கால்பந்து கிளப் அணி ஐந்து லா லிகா, மூன்று சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.