நடப்பு சீசன்களுக்கான ஐ லீக் கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், நேற்று கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சிட்டி எஃப்சி அணி, நெரோக்கா எஃப்சி (Neroca) அணியை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கியதிலிருந்து ஆதிக்கம் செலுத்திய சென்னை சிட்டி எஃப்சி அணிக்கு 25ஆவது நிமிடத்தில் பெனால்டி வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட சென்னை அணியின் நட்சத்திர வீரர் கட்சுமி யுசா கோலாக்கினார்.
பின்னர் 31ஆவது நிமிடத்தில் சென்னை வீரர் ஜாக்சன் தாஸ் தந்த க்ரோஸை, மஷூர் ஹெட்டர் முறையில் கோல் அடிக்க, சென்னை அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இந்த நிலையில், 45ஆவது நிமிடத்தில் நெரோக்கா அணியின் நடுகள வீரர் காய்த்மின்தாங் ஹெட்டர் முறையில் கோல் அடித்து அணிக்கு நம்பிக்கை பெற்றுத்தந்தார்.
இதையடுத்து, 65ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் டிஃபெண்டர்கள் செய்த தவறால், நெரோக்கா அணிக்கு கிடைத்த பெனால்டியை பவ்பக்கர் தியாரா (Boubacar Diarra) கோலாக்கினார். இறுதியில், இப்போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதன் மூலம், புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்திலிருந்து சென்னை சிட்டி எஃப்சி தற்போது நான்கு ஆட்டங்களில் ஒரு வெற்றி, இரண்டு டிரா, ஒரு தோல்வி என ஐந்து புள்ளிகளுடன் ஏழாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. மறுமுனையில், நெரோக்கா அணி நான்கு போட்டிகளில், ஒரு வெற்றி, ஒரு டிரா, இரண்டு தோல்வி என நான்கு புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளது.
இதையும் படிங்க: இந்த கோல் சாதனை மெஸ்ஸிக்கு புதிதல்ல...!