பிரான்ஸ் கால்பந்து சம்மேளனம் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த கால்பந்து வீரர்களை கெளரவிக்கும் வகையில், பாலன் டி ஓர் விருது வழங்கப்படுவது வழக்கம். கால்பந்து போட்டியில் மெஸ்ஸி, யுவண்டஸ் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ இருவரும் தலைசிறந்த வீரர்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
இருவரும் இந்த விருதை 2008 முதல் 2017 வரை தலா ஐந்து முறை வென்ற நிலையில், கடந்த ஆண்டு இந்த பாலன் டி ஓர் விருதை ரியல் மாட்ரிட் வீரர் லூகா மாட்ரிக் பெற்றிருந்தார்.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான பாலன் டி ஓர் விருதை மெஸ்ஸி ஆறாவது முறையாக வென்றார். இதன் மூலம், இந்த விருதை ஆறுமுறை பெற்ற ஒரே வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
முன்னதாக, இவர் இந்த விருதை 2009, 2010,2011, 2012, 2015 ஆகிய ஆண்டுகளில் வென்றுள்ளார். மெஸ்ஸி சிறப்பான ஃபார்மில் இருந்தாலும், அவர் 32 வயதை எட்டியதால் அவரது ஓய்வுக் குறித்த பேச்சுகள் அடிப்பட தொடங்கியுள்ளது. இது குறித்து அவர் கூறுகையில்,
"எனது ஓய்வுக்காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது என்பது எனக்குத் தெரிகிறது. இதனால், தற்போதைய மகிழ்ச்சியான நேரங்களை நான் அனுபவித்துவருகிறேன்.
கடவுளின் அருளால் இன்னும் சில ஆண்டுகள் விளையாடுவேன் என நம்புகிறேன். எதுவாக இருந்தாலும், என் உடல் நிலையை பொறுத்துதான் எனது எதிர்காலம் உள்ளது. தற்போது மன ரீதியிலும், உடல் ரீதியிலும் நான் முன்பை விட நன்றாகவே இருக்கிறேன்" என்றார்.