இந்தியன் பிரீமியர் லீக் என்றழைக்கப்படும் ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஆறாவது சீசன் கடந்தாண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. இத்தொடரானது தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
மேலும் இத்தொடரின் அரையிறுதி போட்டிக்கு கோவா எஃப்சி, கொல்கத்தாவின் ஏடிகே, பெங்களூரு எஃப்சி , சென்னையின் எஃப்சி அணிகள் தேர்வாகியுள்ளன. இந்த அணிகள் வருகிற 29ஆம் தேதி இந்த சீசனுக்கான அரையிறுதிப் போட்டியில் மோதவுள்ளன.
இத்தொடரின் இறுதிப்போட்டியை கோவாவில் நடத்தவுள்ளதாக கால்பந்து விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நிர்வாகத் தலைவரான நீடா அம்பானி இன்று அறிவித்துள்ளார். மேலும் இப்போட்டியானது இந்தாண்டு மார்ச் மாதம் 14ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு, ஜவஹர்லால் நேரு கால்பந்து மைதானத்தில் தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நீடா அம்பானி கூறுகையில், இந்த சீசனுக்கான ஐஎஸ்எல் தொடரின் இறுதிப்போட்டியை நடத்துவதற்கு கோவா தகுதியானது. ஏனெனில், இந்த விளையாட்டை கோவா மக்கள் மிகவும் நேசிக்கின்றனர். இந்தப் போட்டி அங்கு நடைபெறுவதினால் இது ஒரு முக்கிய நிகழ்வாக திகழும் என்றார்.
இதற்கு முன்னதாக ஐஎஸ்எல் தொடரின் இரண்டாவது சீசனுக்கான இறுதிப்போட்டி கோவாவில் நடைபெற்றது. அந்த ஆட்டத்தில் மோதிய சென்னையின் எஃப்சி அணி, 3-2 என்ற கோல் கணக்கில் கோவா எஃப்சி அணியை வீழ்த்தி முதல் முறையாக கோப்பையைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முதல் டெஸ்ட்: அணியைக் காப்பாற்ற போராடும் ரகானே!