அர்ஜெண்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் உள்ள ஒரு சேரி பகுதியில் அக்.30, 1960ஆம் ஆண்டு, டியாகோ மாரடோனா பிறந்தார். சிறு வயது முதலே கால்பந்து விளையாட்டின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக கால்பந்து விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டார்.
அதன் பலனாக, 1976ஆம் ஆண்டு அர்ஜெண்டினா ஜூனியர் அணிக்காக விளையாடி கால்பந்தாட்ட உலகத்திற்கு மாரடோனா அறிமுகமானார். அதன் பின்னர் 1981-82ஆம் ஆண்டில் அர்ஜெண்டினாவின் போகா ஜூனியர்ஸ் அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.
1986ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பைக் கால்பந்து தொடரில் அர்ஜெண்டினா அணியை வழிநடத்தினார் மிட் ஃபீல்டர் டியாகோ மாரடோனா. அத்தொடரில் இங்கிலாந்து அணிகெதிராக அரையிறுதிப் போட்டியின் போது தனது கைகளால் கோலடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அவரின் அந்த கோலானது வரலற்றின் மிகப் பெரிய கோலாகவும் விளங்கி வருகிறது.
அதிலிருந்து அவருக்கு ‘கடவுளின் கை’ என்ற புனைப்பெயரும் வழங்கப்பட்டது. மேலும் அந்த ஆண்டு அர்ஜெண்டினா அணிக்கு கால்பந்து உலகக் கோப்பையையும் பெற்றுத் தந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து 1987 மற்றும் 1990 ஆண்டு நடைபெற்ற இத்தாலியின் சிரி ஏ கால்பந்து தொடரில் நபோலி அணியை வழிநடத்தி கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாகவும் விளங்கினார்.
கடந்த 1987 மற்றும் 1990ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இத்தாலி கோப்பை, யு.இ.எஃப்.ஏ ஆகிய தொடர்களிலும் நபோலி அணி கோப்பையை வெல்வதற்கு உதவினார்.
ஆனால், அவருக்கு இருந்த போதைப் பொருள் பழக்கக் குற்றத்திற்காக, 1991ஆம் ஆண்டு நபோலி அணி, டியாகோ மாரடோனாவை 15 மாதங்கள் இடைநீக்கம் செய்தது.
அதன் பின்னர் 1994ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற கால்பந்து உலகக்கோப்பை தொடரில் ஊக்கமருந்து சோதனையின் போது, மாரடோனா போதைப்பொருள் உபயோகித்தது தெரிய வந்ததால், அவர் உலகக்கோப்பைத் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
அதன் பின்னர் 1997ஆம் ஆண்டு அனைத்து விதமான கால்பந்து விளையாட்டுப் போட்டிகளிலிருந்தும், கால்பந்து ஜாம்பவானான டியாகோ மாரடோனா தனது ஓய்வை அறிவித்தார்.
இதையடுத்து 1999ஆம் ஆண்டு இதய பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது குணமடைந்து வீடு திரும்பிய மாரடோனா, மீண்டும் இதய பிரச்னை காரணமாக 2000ஆம் ஆண்டில் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டது.
தொடர்ந்து போதைப் பழக்கத்திற்கு அடிமையான மாரோடோனா, 2004 ஆம் ஆண்டு மீண்டும் இதயம் மற்றும் சுவாசப்பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த ஆண்டு ஜனவரி மாதம் அவருக்கு வயிற்றுப் பகுதியில் ரத்தபோக்கு ஏற்படுவதற்கான அறுவை சிகிச்சை மற்றும் ஜூலை மாதத்தில் முழங்கால் அறுவை சிகிச்சை ஆகியவை நடைபெற்றதன் மூலம் உயிர்பிழைத்தார்.
அதன் பின்னர் 2008ஆம் ஆண்டு அர்ஜெண்டினா அணியின் பயிற்சியாளராக மாரடோனா நியமிக்கப்பட்டார்.