கரோனா வைரஸ் காரணமாக நடப்பு சீசனில் நடைபெற்றுவந்த ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக், யூரோ கோப்பை, மற்ற உள்நாட்டு லீக் தொடர்களும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய நாடுகளில் இத்தொற்றின் தாக்கம் சமீப நாள்களாகக் குறைந்துவருகின்றன.
இதனால், நடப்பு சீசன் போட்டிகள் விரைவில் தொடங்க அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால், திட்டமிட்ட நாள்களுக்குள் இந்த சீசன் போட்டிகளை முடிக்க வேண்டும் என்பதால் அந்தந்த நாட்டு நிர்வாகம் அடுத்தடுத்து போட்டிகளை நடத்தும் என தெரிகிறது.
ஓய்வின்றி போட்டிகள் நடைபெற்றால் பல வீரர்களுக்கும் காயம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இந்நிலையில், இதனை சரிசெய்யும் வகையில் ஃபிபா அமைப்பு புதிய பரிந்துரை ஒன்றை வழங்கியுள்ளது.
பொதுவாக, கால்பந்து போட்டிகளில் மாற்று வீரர்களின் விதிமுறைப்படி ஒரு போட்டியின்போது ஒரு அணி மூன்று வீரர்களைத்தான் மாற்று வீரர்களாக களமிறக்க முடியும். ஆனால், தற்போது ஃபிபா பரிந்துரைத்தப்படி கரோனா வைரசால் போட்டிகள் அனைத்தும் அடுத்தடுத்து நடைபெறும் என்பதால் அணியில் மூன்று வீரர்களுக்கு பதில் ஐந்து வீரர்களை மாற்று வீரர்களாக களமிறக்கலாம் என குறிப்பிட்டுள்ளது.
மேலும், நாக் அவுட் போன்ற போட்டிகளில் 90 நிமிடங்களுக்கு மேல் ஆட்டத்தில் கூடுதலாக வழங்கப்படும் நேரத்தில் ஆறாவது மாற்று வீரரையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. தற்போதைய சூழலில் ஒரு உயிரை பணயம் வைத்து போட்டியை நடத்துவதைவிட வீரர்களின் உடல்நலன்தான் முக்கியம் என்றும் ஃபிபா தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: விதிமுறைகளுடன் பயிற்சியை மேற்கொள்ளும் கால்பந்து வீரர்கள் - கழுகு பார்வை