கரோனா வைரஸினால் இதுவரை உலகம் முழுவதும் 46 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். இதனால் உலகின் பல்வேறு நாடுகளில் கடுமையான ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மேலும், அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஃபிபா என்றழைக்கப்படும் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பினால் ஆண்டுதோறும், கால்பந்து விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளை தேர்வுசெய்து அவர்களுக்கும் சிறந்த வீரருக்கான விருதினை வழங்குவது வழக்கம். தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா பெருந்தொற்றினால், இம்மாதம் நடைபெறுவதாக இருந்த இவ்விருது வழங்கும் விழாவை ஒத்திவைப்பதாக ஃபிபா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஃபிபா வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தற்போது நிலவிவரும் அசாதாரண சூழல் காரணமாக, உலகம் முழுவதுல் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இம்மாதம் திட்டமிட்டபடி விருது வழங்கும் விழா நடத்தப்படுவது இயலாத காரியமாகும். இதனால் ஃபிபாவின் வருடாந்திர விருது வழங்கும் விழாவை வருகிற செப்டம்பர் மாதத்தில் இத்தாலியிலுள்ள மிலன் நகரில் நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற இவ்விழாவில் இவ்விருதினை ஆடவர் பிரிவில் நட்சத்திர வீரரான அர்ஜெண்டினாவின் மெஸ்ஸியும், மகளிர் பிரிவில் அமெரிக்காவின் மேகன் ராபினோவும் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:'பார்வையாளர்களின்றி கிரிக்கெட் விளையாடுவது கவுண்டி கிரிக்கெட்டைப் போன்று இருக்கும்' - ஜேம்ஸ் ஆண்டர்சன்