தென் அமெரிக்க கண்டத்தின் முன்னணி கால்பந்து அணிகள் பங்கேற்கும் கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் லீக் போட்டிகள் தற்போது நடைபெற்றுவருகிறது. இத்தொடரின் ஏ பிரிவு லீக் போட்டியில் கால்பந்து ஜாம்பவான் அணியான பிரேசில், பெரு அணியுடன் மோதியது.
பிரேசில் அணி தனது முதல் லீக் போட்டியில் 3-0 என்ற கணக்கில் பொலிவியாவை வீழ்த்தியது. அடுத்ததாக வெனிசுவேலா அணியுடன் பிரேசில் மோதிய ஆட்டம் கோல் எதுவும் விழாமல் டிரா ஆனது. பெரு அணியும் தான் மோதிய இரு போட்டிகளில் பொலிவியா அணியுடன் வெற்றியும், வெனிசுவேலா அணியுடனும் டிராவும் செய்தது. இந்நிலையில் இரு அணிகளும் தனது இறுதி லீக் போட்டியை விளையாடின.
ஆட்டத்தின் தொடக்கம் முதலே அதிரடியைக் காட்டிய பிரேசில் அணி முதல் பாதியிலேயே கோல் மழையை பொழிந்தது. பிரேசில் அணியின் நட்சத்திர நடுகள வீரரான கேசிமிரோ 12ஆவது நிமிடத்தில் ஹெட்டர் முறையில் முதல் கோல் அடித்து முன்னிலை ஏற்படுத்தினார். ஆட்டத்தின் 19ஆவது நிமிடத்தில் பெரு அணியின் கோல் கீப்பர் செய்த தவறைப் பயன்படுத்தி பிரேசிலின் மற்றொரு முன்கள வீரரான ஃபிர்மினோ இரண்டாவது கோலை அடித்தார்.
தொடர்ந்து ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரேசில், பெரு அணி வீரர்களைத் திக்குமுக்காடச் செய்தது. இதன் விளைவாக 39ஆவது நிமிடத்தில் பிரேசில் அணி வீரர் எவர்டன் மூன்றாவது கோலை அடித்தார். முதல் பாதியிலேயே 3-0 என்ற முன்னிலை பெற்றது பிரேசில்.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் பிரேசிலின் ஆதிக்கம் குறையவில்லை. 53ஆவது நிமிடத்தில் பிரேசிலின் தடுப்பாட்ட வீரரான டேனி ஆல்வேஸ் அணிக்கு நான்காவது கோலை பெற்றுத்தந்தார். பெரு அணிக்கோ தான் கோலடிப்பதைவிட பிரேசில் அணியின் தாக்குதலைத் தடுத்து நிறுத்துவதே பெரும் சவாலாக இருந்தது. இருப்பினும் ஆட்டத்தின் இறுதி நிமிடமான 90ஆவது நிமிடத்தில் பிரேசில் அணி வீரர் விலியன் அசத்தலான கோலடித்து பிரேசிலின் கணக்கை முடித்துவைத்தார்.
இறுதியில் 5-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் தனது பிரிவில் 7 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள பிரேசில் அணி எளிதாக நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.