கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற இருந்த ஃபிஃபா அண்டர்-17 மகளிர் உலகக்கோப்பை தொடர், தற்போது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இதில் பங்கேற்கவுள்ள இந்திய வீரங்கனைகளின் உணவு முறையை அதிகரிக்க, இந்திய கால்பந்து கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு வீராங்கனைக்கும் ரூ.10,000 வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, ஏ.ஐ.எஃப்.எஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஃபிஃபா அண்டர்-17 மகளிர் உலகக்கோப்பை தொடருக்கான புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டதினால் ஏ.ஐ.எஃப்.எஃப், எல்ஓசி மகிழ்ச்சியடைந்துள்ளது. மேலும் இத்தொடரை இந்தியாவில் நடத்துவதன் மூலம் இந்திய கால்பந்து தங்களின் முன்னேற்றப்பாதையில் செல்லும் என்பதில் ஐயமில்லை.
அதேசமயம் இத்தொடர் நடைபெறும் சமயம் வீரர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் நலனில் இந்திய விளையாட்டு அமைச்சகம் பெரும் பங்களிப்பை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இத்தொடரில் கலந்துகொள்ளும் இந்திய வீராங்கனைகளின் உணவு முறையை அதிகரிக்க ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஒவ்வொரு வீராங்கனைக்கும் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கவும் இந்திய விளையாட்டு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது" என்று தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நடைபெறவுள்ள ஃபிஃபா யு-17 மகளிர் உலகக் கோப்பை தொடரானது, நவி மும்பை, கவுகாத்தி, கொல்கத்தா, புவனேஷ்வர், அகமதாபாத் ஆகிய நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.