மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 10ஆவது ஆட்டம் இன்று (மார்ச் 12) தொடங்கியது. இந்த போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், அலிசா ஹீலி தலைமையிலான உத்தரப் பிரதேச வாரியர்ஸ் அணியும் மோதுகின்றன. முதலில் டாஸ் வென்ற உத்தரப் பிரதேச வாரியர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதன்படி வாரியர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான தேவிகா வைத்யா, அலிசா ஹீலி களமிறங்கி உள்ளனர். உ.பி. அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கிரேஸ் ஹாரிஸுக்கு பதிலாக ஷப்னிம் இஸ்மாயில் ஆட்டத்தில் உள்ளார். அதேபோல, மும்பை இந்தியன்ஸ் அணியிலும் பூஜா வஸ்த்ரகருக்குப் பதிலாக தாரா குஜ்ஜர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
டாஸ் வென்ற பின் அலிசா ஹீலி கூறுகையில், நாங்கள் பேட்டிங் செய்ய திட்டமிட்டுள்ளோம். அதற்கேற்ப அணியில் மாற்றம் செய்துள்ளோம். அதேபோல பந்து வீச்சிலும் கவனம் செலுத்த உள்ளோம். முந்தைய ஆட்டங்களில் நாங்கள் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டோம் எனத் தெரிவித்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணி வீராங்கனைகள் விவரம்: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), யாஸ்திகா பாட்டியா (கீப்பர்), ஹேலி மேத்யூஸ், நாட் ஸ்கிவர்-பிரண்ட், தாரா குஜ்ஜார், அமெலியா கெர், இஸ்ஸி வோங், அமன்ஜோத் கவுர், ஹுமைரா காசி, ஜிந்திமணி கலிதா, சைகா இஷாக்.
உத்தரப் பிரதேச வாரியர்ஸ் அணி வீராங்கனைகள் விவரம்: தேவிகா வைத்யா, அலிசா ஹீலி(கேப்டன்/கீப்பர்), ஸ்வேதா செஹ்ராவத், கிரண் நவ்கிரே, தஹ்லியா மெக்ராத், தீப்தி சர்மா, சிம்ரன் ஷேக், சோஃபி எக்லெஸ்டோன், ஷப்னிம் இஸ்மாயில், அஞ்சலி சர்வானி, ராஜேஸ்வரி கயக்வாட்.
இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், லக்னோ வாரியர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய ஐந்து அணிகள் பங்கேற்கின்றன. புள்ளிப் பட்டியலில், மும்பை அணி 3 போட்டிகளில் கூடுதல் ரன்ரேட்டுடன் 3 வெற்றிகள் என்ற கணக்கில் 6 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
இதையடுத்து டெல்லி அணி 4 போட்டிகளில் 3 வெற்றி 1 தோல்வி என்ற கணக்கில் 2ஆவது இடத்தில் உள்ளது. உத்தரப் பிரதேச அணி 3 போட்டிகளில் 2 வெற்றிகள் 1 தோல்வி என்ற கணக்கில் 3ஆவது இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் அதிக ரன்களுடன் உபி அணி வெற்றி பெற்றால் முதல் இடத்தை பிடிக்கும். இல்லையென்றால், மும்பை அணி தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கும்.
இதையும் படிங்க: டெஸ்ட் போட்டியில் 3 ஆண்டுகளுக்கு பிறகு சதம்: 'கம்பேக்' கொடுத்த விராட் கோலி