டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டி-20 போட்டி இன்று நடைபெறுகிறது. பணி சுமை காரணமாக முன்னணி வீரர்களான கோலி , ரோகித் , பும்ரா ஆகியோருக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், கே.எல்.ராகுல் கேப்டனாக பொறுப்பு வகிப்பார் என பிசிசிஐ அறிவித்தது.
ஆனால் நேற்று காயம் காரணமாக ராகுலும் , குல்தீப் யாதவும் தொடரில் இருந்து விலகியதால் அணிக்கு ரிஷப் பந்த் கேப்டனாகவும் , ஹர்திக் பாண்ட்யா துணை கேப்டனாகவும் செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் இந்தாண்டு நடைபெறவுள்ள டி-20 உலக கோப்பைக்கு முன்னோட்டமாக கருதப்படும் இந்த தொடரில் இந்திய இளம் படை எப்படி செயல்பட போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
கே.எல்.ராகுல் காயம் காரணமாக விலகி விட்டதால் , தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் ரிதுராஜ் கேக்வாத் களமிறங்க உள்ளனர். அடுத்ததாக ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மிடில் ஆர்டரில் கேப்டன் பந்த் - துணை கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவும் , பினிஷர் ரோலில் தினேஷ் கார்த்திக் களமிறங்க வாய்ப்பு உள்ளது.
டெல்லி மைதானம் சுழற்சி பந்து வீச்சுக்கு உகந்தது என்பதால் அணியில் சாஹல் , அக்ஷர் பட்டேல் இடம் பெறுவார்கள். வேகப்பந்து வீச்சிற்கு புவனேஷ்வர் குமார் , உம்ரான் மாலிக் மற்றும் டெத் ஓவர்களில் பந்து வீச ஹர்ஷல் பட்டேல் பிளேயிங் 11ல் இடம் பெறவுள்ளனர். போட்டியில் டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய அதிக வாய்ப்பு உள்ளது.