தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய எட்டு நகரங்களை மையமாகக் கொண்டு 20 ஓவர் கிரிக்கெட் தொடரான தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) நடத்திவருகிறது. 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் தொடர் நான்கு ஆண்டுகள் வெற்றிகரமாக நடைபெற்றது.
ஐந்தாவது சீசன் கடந்தாண்டு கரோனா அச்சுறுத்தல் காரணமாக நடைபெறவில்லை. தற்போது ஜூன் 4ஆம் தேதிமுதல் ஐந்தாவது சீசன் தொடங்கும் எனத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
ஜூன் 4ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் - ஐட்ரீம் திருப்பூர் தமிழன் அணிகளுக்கும் இடையே திருநெல்வேலியில் வைத்து நடைபெறுகிறது.
ஜூன் 4ஆம் தேதி தொடங்கும் இந்தப் போட்டி ஜூலை 4ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப் போட்டியானது சேலத்தில் நடைபெறுகிறது.
இது குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ராமசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு அரசின் அனுமதி பெற்று நடப்பாண்டிற்கான டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது.
கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றி போட்டிகள் நடத்தப்படும். அணிகளின் வீரர்களுக்கு அடிக்கடி கரோனா பரிசோதனை மேற்கொள்ளுதல், பயோ பபுள், தனிமைப்படுத்தல் ஆகியவை முறையாகப் பின்பற்றப்படும்.
இந்தப் போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ், சேபாக் சூப்பர் கில்லீஸ், எல்.ஒய்.சி.ஏ. கோவை கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்கள், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்கள் ஆகிய எட்டு அணிகள் கலந்துகொள்கின்றனர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.