சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 தொடரின் ஐந்தாவது சீசன் கடந்த ஜூலை 19ஆம் தேதி தொடங்கிய நிலையில், ப்ளே-ஆஃப் சுற்று போட்டிகள் நேற்று (ஆக. 10) தொடங்கின. குவாலிஃபயர் 1 என்னும் இறுதிப்போட்டிக்கான தகுதிச்சுற்றில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்களைச் சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ராதாகிருஷ்ணன் 82 ரன்களை எடுத்தார். திருச்சி பந்துவீச்சு தரப்பில் சரவணன் குமார் இரண்டு விக்கெட்டுகளையும், மதிவண்ணன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதையடுத்து, களமிறங்கிய திருச்சி அணிக்கு சந்தோஷ் ஷிவ் 5, அமித் சாத்விக் 9 ரன்களில் ஆட்டமிழந்து மோசமான தொடக்கத்தை அளித்தனர். முகமது அட்னான் கானும் 4 ரன்களில் வெளியேறி சற்று ஏமாற்றத்தை அளித்தார்.
வலுவான மிடில் ஆர்டர்
விக்கெட்டுகள் சரிந்தாலும் திருச்சி அணியில் ரன்-ரேட் குறையவே இல்லை. நான்காவது விக்கெட்டுக்கு இணை சேர்ந்த நிதீஷ் ராஜகோபால், ஆதித்யா கணேஷ் ஆகியோர் விக்கெட்டை பறிகொடுக்காமல் சீராக ஆடினர். அரைசதம் கடந்திருந்த ராஜகோபால் 18ஆவது ஓவரில் ரன்-அவுட்டானார்.
சிக்சர் to பைனல்
இதையடுத்து, கடைசி ஓவருக்கு ஆறு ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. அந்த ஓவரில் முதல் பந்தில் ஆண்டனி தாஸ் மூன்று ரன்களில் வெளியேற அடுத்து சரவணன் குமார் களமிறங்கினார். இரண்டாவது பந்தில் இரண்டு ரன்களும், மூன்றாவது பந்தில் ரன் எடுக்காத சரவணன், நான்காவது பந்தில் சிங்கிள் எடுத்து ஆதித்யாவுக்கு ஸ்ட்ரைக் கொடுத்தார்.
கடைசி 2 பந்துகளில் 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ஐந்தாவது சிக்சர் அடித்து திருச்சி அணியை டிஎன்பில் ஐந்தாவது சீசனின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறவைத்தார், ஆதித்யா.
ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தனது வெற்றியைப் பதிவுசெய்திருந்த திருச்சி அணியில், அதிகபட்சமாக நிதீஷ் ராஜகோபால் 55 ரன்களும், ஆதித்யா கணேஷ் 66 ரன்களும் எடுத்திருந்தனர்.
ப்ளே-ஆஃப் போட்டிகள்
இதையடுத்து, இன்று (ஆக. 11) நடைபெற இருக்கும் எலிமினேட்டர் போட்டியில் திண்டுக்கல் அணியுடன் லைகா கோவை கிங்ஸ் அணி மோதவுள்ளது. இதில் வெற்றிபெறும் அணி வரும் வெள்ளிக்கிழமை (ஆக. 13) அன்று நடைபெறும் குவாலிஃபயர்-2 போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியுடன் மோதும்.
குவாலிஃபயர்-2 போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியைச் சந்திக்கும். இறுதிப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 15) அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: EXCLUSIVE INTERVIEW: நாடே எங்களை வரவேற்றது போல் இருந்தது - கேப்டன் மன்பிரீத்