டெல்லி: தனியார் விளையாட்டு தொலைக்காட்சி சேனல் கிரிக்கெட் ரசிகர்களுக்கும், கிரிக்கெட் வர்ணனையாளர்களுக்கும் வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. 21ஆம் நூற்றாண்டில் இந்திய முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், இலங்கை முன்னாள் வீரர் குமார் சங்கக்காரா இருவரில் யார் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் என்ற கேள்வியை முன்வைத்து அவ்வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
என்றும் சச்சினே
இதில், சந்தேகமின்றி கிரிக்கெட் ஜாம்பவானும், இந்திய முன்னாள் கேப்டனுமான சச்சின் டெண்டுல்கருக்கே அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன. விவிஎஸ் லக்ஷ்மண், இர்பான் பதான், ஆகாஷ் சோப்ரா உள்ளிட்ட பல பிரபலங்களும், வர்ணனையாளர்களும் இதில் வாக்களித்துள்ளனர்.
இந்த வாக்கெடுப்பின் முடிவை இந்திய அணியின் மூத்த வீரர் கவாஸ்கர் வெளியிட்டுள்ளார். அந்த காணொலியை அத்தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அக்காணொலியில், “இக்கேள்வி சற்று கடினமானதுதான். இருவரும் கிரிக்கெட்டின் மிகப்பெரும் புள்ளிகள். இருப்பினும், இந்த போட்டியில் வென்றது, சக மும்பையை சேர்ந்தவரான சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் தான்" என்று கூறியுள்ளார்.
முறியடிக்கப்படாத சாதனைதான் சச்சின்
சச்சின், டெஸ்ட் கிரிக்கெட் 51 சதங்கள் உள்பட 15,921 ரன்களை குவித்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 2,543 ரன்கள் பின்தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பட்டியலில், இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரா 38 சதங்கள் உள்பட 12,400 ரன்களை குவித்து ஆறாவது இடத்தில் உள்ளார்.
இதையும் படிங்க: WTC FINAL: ஆல்-அவுட்டானது இந்தியா; நியூசிலாந்து நிதானம்