துபாய்: இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த 7ஆவது ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் (2021) இந்தியாவில் நடைபெற இருந்தது.
கரோனா தொற்று பரவல் காரணமாக இத்தொடர் ஐக்கிய அரபு அமீரகம், ஓமனில் நடைபெறுகின்றன. இம்மாதம் 17ஆம் தேதி தொடங்கும் இந்தத் தொடரானது, நவம்பர் 14ஆம் தேதிவரை நடைபெறுகிறது.
புல் மேடுகளுக்கும் அனுமதி
இந்நிலையில், உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறும் ஐக்கிய அரபு அமீரக மைதானங்களில் 70 விழுக்காடு பார்வையாளர்களுக்கு ஐசிசி அனுமதி அளித்துள்ளது.
துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய மைதானங்களில் மொத்தம் உள்ள இருக்கைகளில், 70 விழுக்காடு இருக்கைகள் பார்வையாளர்கள் அமரவைக்கப்படுவர். மேலும், மைதானங்களில் உள்ள புல் மேடுகளில் ஒரு வரிசைக்கு நான்கு பேர் வீதம் அமரவைக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் ரசிகர்கள்
ஐசிசி, தொடரை நடத்தும் பிசிசிஐ ஆகிய அமைப்புகள் போட்டி ஒருங்கிணைப்பாளர்களுடன் நடத்திய ஆலோசனைகளுக்கு பிறகு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஓமனில் 30 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் தற்காலிக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாக ஓமன் கிரிக்கெட் அகாதமி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐசிசியின் தலைமை நிர்வாக அலுவலர் (செயல்) ஜெஃப் அலார்டிஸ் கூறுகையில், "ரசிகர்களை மீண்டும் மைதானங்களில் வரவேற்பதற்கு நாங்கள் ஆவலாக உள்ளோம். ரசிகர்கள் கரோனா தொற்று பயமின்றி போட்டியைக் காண்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொண்ட பிசிசிஐ, அமீரக கிரிக்கெட் வாரியம், ஓமன் கிரிக்கெட் அகாதமி, பிராந்திய அரசு நிர்வாகங்களுக்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரிலும், 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது நினைவுக் கூரத்தக்கது.
பெருந்தொற்று பின் பெருந்தொடர்
உலகக்கோப்பை தொடரின் முதற்கட்டப் போட்டிகள் வரும் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்குகின்றன. மேலும், 'சூப்பர் - 12' சுற்றின் முதல் போட்டியில், 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டி அபுதாபி ஷேக் சயீத் மைதானத்தில் அக்டோபர் 23ஆம் தேதி நடைபெறுகிறது. கரோனா பெருந்தொற்று காலத்திற்கு பிறகு நடைபெறும் மிகப்பெரும் கிரிக்கெட் தொடர் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் டி20 உலக்கோப்பை தொடர் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.