கொல்கத்தா : இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்யும் நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. முதல் இரண்டு ஆட்டங்களிலும் நியூசிலாந்து தோல்வியை தழுவிய நிலையில், 3ஆவது போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் நடந்தது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களம் கண்ட ரோகித் சர்மா 31 பந்துகளில் 56 ரன்கள் குவித்தார். இதில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகள் அடங்கும்.
மற்ற தொடக்க வீரரான இஷான் கிஷான் 21 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சூர்யகுமார் யாதவ் (0), ரிஷப் பந்த் (4), ஷ்ரேயாஸ் ஐயர் (25), வெங்கடேஷ் ஐயர் (20), அக்ஸர் பட்டேல் (2), ஹர்ஷல் பட்டேல் (18), தீபக் சஹர் (21*) ஆகியோர் தன் பங்குக்கு ரன்கள் சேர்க்க இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் குப்தில் மட்டும் அதிரடியாக ஆடி 36 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸருடன் 51 ரன்கள் எடுத்தார்.
மற்ற வீரர்கள் மிட்செல் (5), சப்மேன் (0), பிலிப்ஸ் (0), ஜேம்ஸ் நீஸம் (3), மிட்செல் சான்ட்நர் (2), ஆடம் மில்லினே (7), சோதி (9) ஆகியோர் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர்.
திம் சீஃபர்ட் 17 ரன்கள் எடுத்திருந்தார். இந்த நிலையில் நியூசிலாந்து அணி 17.2 ஓவர்களில் 111 ரன்கள் எடுத்து, 73 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன்மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை முழுவதும் கைப்பற்றி நியூசிலாந்து அணியை வொயிட்வாஷ் (whitewash) செய்தது.
இந்திய அணி தரப்பில் அக்ஸர் பட்டேல், ஹர்ஷால் பட்டேல், வெங்கடேஷ் ஐயர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.
இதையும் படிங்க : India vs New Zealand 2nd T20 : நியூசிலாந்தை ஊதித் தள்ளிய இந்தியா!