மும்பை : 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் அதில், இந்தியா, தென் ஆபிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் நாக் அவுட் சுற்றான அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணியின் இன்னிங்சை ரோகித் சர்மா மற்ற்ம் சுப்மான் கில் தொடங்கினர்.
ஆரம்பமே அதிரடியாக விளையாடி வந்த ரோகித் சர்மா தனது பங்கிற்கு 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் ரோகித் சர்மா விளாசிய 4 சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம் ஒரு உலக கோப்பை கிரிக்கெட் மற்றும் ஒட்டுமொத்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனைக்கு ரோகித் சர்மா சொந்தக்காரர் ஆனார்.
இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில், ஒரு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 26 சிக்சரும், ஓட்டுமொத்த உலக கோப்பை தொடர்களில் 49 சிக்சர்களும் விளாசி இருந்தார். தற்போது இந்த சாதனையை ரோகித் சர்மா முறியடித்து உள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது அரைஇறுதியில் ரோகித் சர்மா விளாசிய 4வது சிக்சர், நடப்பு உலக கோப்பை தொடரில் அவரது 28வது சிக்சராக அமைந்தது.
ஒட்டுமொத்த உலக கோப்பை போட்டிகளில் 51வது சிக்சராக அமைந்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயிலின் நீண்ட கால சாதனையை ரோகித் சர்மா முறியடித்து உள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் ரோகித் சர்மா - சுப்மன் கில் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 71 ரன்களை சேர்த்தது.
அதேபோல், இந்த ஆட்டத்தில் 40 ரன்களுக்கு மேல் ரோகித் சர்மா அடித்தார். இதன் மூலம், ஒரு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக முறை 40 ரன்களுக்கு மேல் அடித்த வீரர் என்ற சிறப்பை ரோகித் சர்மா பெற்றார். ரோகித் சர்மா, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, அணிகளுக்கு எதிராக 48 ரன் 46 ரன்களும் நியூசிலாந்து அணிக்கு எதிராக இரண்டு முறை 40 ரன்களுக்கு மேல் எடுத்து உள்ளார்.
ஒரு உலக கோப்பையில் அதிக சிக்சர்கள் :
28 - ரோஹித் சர்மா (2023)
26 - கிறிஸ் கெய்ல் (2015)
22 - இயான் மோர்கன் (2019)
22 - கிளென் மேக்ஸ்வெல் (2023)
21 - ஏபி டி வில்லியர்ஸ் (2015)
21 - குயின்டன் டி காக் (2023)
உலகக் கோப்பையில் அதிக சிக்சர்கள் :
51 - ரோகித் சர்மா
49 - கிறிஸ் கெய்ல்
43 - கிளென் மேக்ஸ்வெல்
37 - ஏபி டிவில்லியர்ஸ்
37 - டேவிட் வார்னர்.
இதையும் படிங்க : Virat Kohli 50th Century : ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி 50வது சதம்! சச்சின் சாதனை முறியடிப்பு!