அகமதாபாத் (குஜராத்): ஐசிசி ஒரு நாள் போட்டிகளுக்கான உலகக் கோப்பை கிரிகெட் போட்டிகள் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மைதனங்களில் நடைபெற்றது. லீக் சுற்று மற்றும் அரை இறுதிப் போட்டிகளில் தோல்விகளே இல்லாமல் இந்திய அணி பல்வேறு சாதனைகளைப் படைத்தபடி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதன் பின்னர், நவம்பர் 19ஆம் தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்தியா எதிர் கொண்டது.
ஆரம்பத்தில் சுவாரசியமாக இருந்த நிலையில், இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 50 ஓவர்களில் 240 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. அதனை எதிர்கொண்ட ஆஸ்திரேலிய அணி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி, 6வது முறையாக உலகக் கோப்பையை வென்றது. இந்திய அணியின் இந்த தோல்வி, இந்திய கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
இதனை அடுத்து, இந்திய அணி வீரர்களுக்கு ஆறுதல் கூறும் வார்த்தைகளை, பிரதமர் மோடி தனது X சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், பிரதமர் மோடி இந்திய அணி வீரர்களின் டிரஸ்ஸிங் அறைக்கு நேரடியாகச் சென்று ஆறுதல் கூறிய வீடியோ வெளியாகி உள்ளது.
அதில் பிரதமர் மோடி, விராட் கோலி மற்றும் ரோகித் சரமா ஆகியோரின் கைகளை இறுகப் பிடித்தபடி ஆறுதல் கூறினார். அதனைத் தொடர்ந்து, “இத்தனை போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளீர்கள். இதெல்லாம் நடக்கக் கூடியதுதான். இதுவும் கடந்து போகும், புன்னகை செய்யுங்கள், மொத்த தேசமும் உங்களைத்தான் பார்த்துக் கொண்டு இருக்கிறது" என்று கூறினார்.
பின்னர், அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் மற்ற வீரர்களுக்கு கை கொடுத்து, தோளை தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறினார். பின்னர், இத்தொடரில் சிறப்பாக பந்து வீசிய முகமது ஷமியை ஆரத்தழுவி பிரதமர் ஆறுதல் கூறினார். அதன் பின்னர் அனைவரையும் ஒற்றுமையாக இருக்குமாறும், ஒருவருக்கொருவர் ஆறுதலாகவும், ஊக்கமாகவும் இருக்குமாறும் அறிவுரை கூறினார்.
பின்னர், நிறைவாக அனைவரையும் டெல்லி வரும்படி அழைப்பு விடுத்த பிரதமர் மோடி, தன் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும் என்று கூறினார். இந்த நிலையில், பிரதமர் மோடி இந்திய கிரிக்கெட் வீரர்கள் அனைவரையும் நேரில் சென்று ஆறுதல் கூறிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 போட்டித் தொடர், நாளை மறுநாள் (நவ.23) ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: "உலகக் கோப்பையை நழுவவிட்டாலும் எங்களது ஆதரவு இந்திய அணிக்கே" - விராட் கோலியின் சகோதரி!