ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஐந்து ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஷார்ஜாவில் தொடங்கிய முதல் போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் மாலிக் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய பாகிஸ்தானின் இமாம்-உல்-ஹக் - மசூத் இணை முதல் விக்கெட்டுக்கு 35 ரன்கள் எடுத்த நிலையில், இமாம் 17 ரன்களில் வெளியேற மற்றொரு தொடக்க வீரர் மசூத் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த உமர் அக்மல் 48 ரன்களிலும், கேப்டன் மாலிக் 11 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும், இளம் வீரர் ஹாரிஸ் சோஹைல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய இவர், ஒருநாள் போட்டிகளில் தனது முதல் சதத்தை அடித்து அசத்தினார். வாசிம் 28 ரன்களும், சோஹைல் 101 ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியாக பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 280 ரன்கள் எடுத்தது.
பின்னர் 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் கவாஜா 24 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த ஷான் மார்ஷ்-கேப்டன் ஃபின்ச் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டது. இரண்டாவது விக்கெட்டுக்கு இந்த இணை 172 ரன்களை சேர்த்தது. கான் மார்ஷ் ஒருநாள் போட்டிகளில் தனது 14-வது அரை சதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் கேப்டன் பின்ச் ஒருநாள் போட்டியில் 12-சதத்தை பதிவு செய்து, 116 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து வந்த ஹேண்ட்ஸ்கோம்ப் 30 ரன்களுடனும், மார்ஷ் 91 ரன்களுடனும் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 281 ரன்கள் எடுத்து பாகிஸ்தானை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சதமடித்த கேப்டன் ஃபின்ச் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் இருக்கிறது.