பெங்களூரு: ஐசிசி உலகக் கோப்பை கடந்த 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இதன் 18வது லீக் ஆட்டமாக ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் நாளை (அக்டோபர் 20) பெங்களூரூவின் சின்னசாமி மைதானத்தில் மோதுகின்றன. இந்நிலையில், பாகிஸ்தான் வீரர்கள் ஃபகார் ஜமான் காயம் காரணமாகவும், சல்மான் அலி ஆகா காய்ச்சல் காரணமாகவும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நாளைய போட்டியில் கலந்து கொள்ள மாட்டார்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
நடப்பாண்டு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி தனது முதல் இரு ஆட்டங்களில் நெதர்லாந்து மற்றும் இலங்கை அணியை வீழ்த்தியது. ஆனால் இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஆட்டத்தில் அவர்கள் தோல்வியைத் தழுவினர். இதனைத் தொடர்ந்து அந்த அணி ஆஸ்திரேலிய அணியை நாளை பெங்களூருவில் சந்திக்கிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் வீரர்களான ஃபகார் ஜமான் மற்றும் சல்மான் அலி ஆகா ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், கலந்து கொள்ளப் போவது இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து அந்நாட்டு அணியின் ஊடக மேலாளர் ஓர் அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறியதாவது; "முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வரும் ஃபகார் ஜமான் சிகிச்சை பெற்று வருகிறார். அதேபோல், மற்றொரு வீரரான சல்மான் அலி ஆகா நேற்று (அக்.18) மேற்கொண்ட பயிற்சிக்குப் பிறகு அவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. அவர் அதிலிருந்து மீண்டு வருவதற்காக ஓய்வில் உள்ளார்" இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: Karthikeyan Murali : நம்பர் ஒன் செஸ் வீரர் மாக்னஸ் கார்ல்செனை வீழ்த்திய தமிழக வீரர்!