ஐதராபாத் : 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கனிஸ்தான், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 10 அணிகள் விளையாடி வருகின்றன.
லீக் சுற்று ஆட்டங்கள் இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க அணிகள் போராடி வருகின்றன. இதுவரை இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மட்டும் அரைஇறுதிக்கு தகுதி பெற்று இருந்த நிலையில் நேற்று (நவ. 7) மும்பையில் நடந்த லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 3வது அணியாக ஆஸ்திரேலியாவும் அரைஇறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இனி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற ஒரு இடம் மட்டுமே மீதம் உள்ளது. அந்த இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. நியூசிலாந்து அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நாளை (நவ. 9) இலங்கை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே நியூசிலாந்து அணி நெட் ரன் ரேட் அடிப்படையில் அரைஇறுதி வாய்ப்பை நினைவில் கொள்ள முடியும்.
இல்லையெனில் அடுத்தடுத்த ஆட்டங்களில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் இமாலய வெற்றி பெற்றால் அரைஇறுதி வாய்ப்பை நியூசிலாந்திடம் இருந்து தட்டி பறிக்க நேரிடும். பாகிஸ்தான் அணி அரைஇறுதி சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்பது இந்தியா மற்றும் பாகிஸ்தான் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.
அரை இறுதி சுற்றை பொறுத்தவரை புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள அணி 4வது இடத்தில் இருக்கும் அணியையும், அதேபோல் 2வது இடத்தில் இருக்கும் அணி 4வது இடத்தில் இருக்கும் அணியையும் எதிர்கொள்ளும். அப்படி பார்க்கையில் பாகிஸ்தான், 4வது அணியாக அரைஇறுதி சுற்றுக்கு தகுதி பெறும் பட்சத்தில், இந்திய அணியுடன் மீண்டும் மல்லுக்கட்ட வேண்டியது வரும்.
நவம்பர் 15ஆம் தேதி நடக்கும் முதல் அரையிறுதியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுவதற்கான வாய்ப்பு இன்னும் அதிகமாகவே உள்ளது. இது நடக்க வேண்டுமானால், கொல்கத்தாவில் வரும் 11ஆம் தேதி நடைபெறும் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்துக்கு எதிராக பாபர் தலைலையிலான பாகிஸ்தான் அணி அபாரமான வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
அதேபோல் நாளை (நவ. 9) பெங்களூருவில் நடைபெறும் நியூசிலாந்து - இலங்கை ஆட்டமும் மிக முக்கியமானது. இந்த ஆட்டத்தில் இலங்கை அணி நியூசிலாந்தையும், நவம்பர் 11ஆம் தேதி பாகிஸ்தான், இங்கிலாந்தையும் முறையே தோற்கடித்தால், புள்ளி மற்றும் நெட் ரன் ரேட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அடுத்த சுற்று வாய்ப்பை பிடிக்கும்.
அதேபோல் மற்றொரு ஆட்டத்தில் நவம்பர் 10ஆம் தேதி நடைபெறும் லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தானை வீழ்த்தினால், பாகிஸ்தான் அணி அரைஇறுதி வாய்ப்பை பெற ஏதுவாக இருக்கும். இருப்பினும், ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றால், பாகிஸ்தான் நெட் ரன் ரேட்டை பொறுத்தே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். அப்படி இருக்கையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
இருப்பினும், நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளின் போட்டிக்குப் பிறகு பாகிஸ்தான் தனது கடைசி ஆட்டத்தை விளையாடுவதால் அப்போதைய சூழலுக்கு ஏற்ப அந்த அணியால் விளையாட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளை காட்டிலும் நியூசிலாந்து அதிக நெட் ரன் ரேட் கொண்டு உள்ளது. அந்த அணி 0.398 ஐ நெட் ரன் ரேட்டாக கொண்டுள்ளது. அத்தகைய சந்தர்ப்பத்தில், இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணியின் வெற்றி வித்தியாசம் சிறியதாக இருக்குமாயின் பாகிஸ்தானுக்கு அரை இறுதி வாய்ப்பு உள்ளது.
அதாவது நியூசிலாந்து அணி 1 ரன் வித்தியாசத்தில் இலங்கையை வெற்றி பெற்றால், பாகிஸ்தான் 130 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்த வேண்டும். இருப்பினும் மற்றொரு புறம், ஆப்கானிஸ்தான் அணி பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தல் அளிக்கும். ஆப்கானிஸ்தான் அணி, தென் ஆப்பிரிக்காவிடம் தோற்றால் அது பாகிஸ்தானுக்கு நல்வாய்ப்பாக அமையும்.
அதேநேரம் அரைஇறுதி சுற்றுக்கு நான்காவது அணியாக ஆப்கானிஸ்தான் தகுதி பெற வேண்டுமானால், நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளின் நெட் ரன் ரேட்டை முறியடிக்க வேண்டும். அதற்கு பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். ஆனால் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் முறையே இலங்கை மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக தோற்றால் மட்டுமே, தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானின் வெற்றி பலன் தரும். இல்லையெனில் ஆறுதல் பட்டு சொந்த நாட்டுக்கு செல்வதே நல்ல வாய்ப்பு.
இதையும் படிங்க : ஒருநாள் கிரிக்கெட் தரிவரிசை: சச்சினுக்கு பின் சுப்மனுக்கு அடித்த அதிர்ஷ்டம்! ஜடேஜாவும் லேசுபட்ட ஆளில்லை!