துபாய்: ஆசியக்கோப்பை டி20 தொடர் அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. நேற்று (செப்.4) நடந்த சூப்பர் 4 போட்டியில், பாகிஸ்தான் அணி இந்திய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இருப்பினும் விராட் கோலி 44 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து, அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த விராட் கோலி, "நான் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பதவியில் இருந்து விலகியபோது, என்னுடன் விளையாடிய யாரும் என்னை அழைக்கவில்லை. என்னுடைய போன் நம்பர் பலரிடம் இருக்கிறது. ஆனால் ஒருவரிடமிருந்து மட்டுமே மெசேஜ்கள் வந்தன. எம்.எஸ். தோனி அதை செய்தார். மற்றவர்கள் தொலைக்காட்சி மூலம் எனக்கு ஆலோசனை வழங்கினார்கள்.
நாம் ஒருவருடன் உண்மையாக பழகும்போது, இதுபோன்ற தருணங்களில் அது வெளிவரும். அவர்களின் விமர்சனம் நேர்மையாகவும் உண்மையாகவும் இருந்திருந்தால், அவர்கள் நேரடியாக எனக்கு மெசேஜ் அனுப்பியிருக்கலாம், அதற்கு நானும் பதிலளித்திருப்பேன். தோனிக்கு என்னிடமிருந்து எதுவும் தேவையில்லை, அதேபோல் எனக்கும் அவரிடமிருந்து எதுவும் தேவையில்லை. இதுபோன்ற சூழ்நிலைகளில் உண்மையில் நீங்கள் யாருக்காவது துணையாக இருக்க விரும்பினால், தனிப்பட்ட முறையில் அவரை தொடர்பு கொண்டு பேசுங்கள்" என்று உருக்கமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்திய கிரிக்கெட் அணியை வீழ்த்திய பாகிஸ்தான்