ஐபிஎல் 14ஆவது சீசன் 19ஆவது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.
மும்பை வான்கடே மைதானத்தில் பகல் 3.30 மணியளவில் நடைபெறும் இந்தப் போட்டி, நிச்சயம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. பேட்டிங்கிற்குச் சாதகமான மும்பை பிட்சில், சென்னையின் ஸ்பின் அட்டாக் எப்படி வேலை செய்யப்போகிறது என்பதைப் பொறுத்துத்தான் பார்க்க வேண்டும்.
இந்த ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் பலம்வாய்ந்து காணப்படுகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை பங்கேற்ற அனைத்துப் போட்டிகளிலும் அபார வெற்றிபெற்று எட்டு புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரேயொரு தோல்வியை மட்டும் எதிர்கொண்டு ஆறு புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது.
முதலிரண்டு இடங்களில் நீடிக்கும் அணிகளும் இன்று சந்திக்கவுள்ளதால் இப்போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இரு அணிகளும் 26 முறை நேருக்கு நேர் சந்தித்து அதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16 முறை வென்றுள்ளது. ஆர்சிபி 9 முறை மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. மழை காரணமாக ஒரு போட்டியில் முடிவு அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, இன்றிரவு 7.30 மணிக்குத் தொடங்கும் இரண்டாவது போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், டெல்லி கேப்பிட்ல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.
இதையும் படிங்க: கரோனா சமயத்தில் ஐபிஎல் அவசியமா?