கிரிக்கெட் விளையாட்டின் ஆண்டைகளாகப் பார்க்கப்படும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளுமே வேகப்பந்துவீச்சிற்கு முக்கியத்துவம் அளிப்பவை.
ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் விளையாடும் பேக்-யார்ட் கிரிக்கெட்டில் இருந்து அனைத்து இடங்களிலும் பாஸ்ட் பவுலர்கள் என்றால் தனி மரியாதைதான். அப்படியிருக்க, ஏறத்தாழ இரு தசாப்தங்களாக மிரட்டும் வேகப்பந்துவீச்சாளர்கள் ஒருமுனையில் தாக்குதல் தொடுக்க, மறுமுனையில் ஷேன் வார்னே எனும் லெக்-ஸ்பின்னர், எதிரணியினரை ஆட்டிப்படைத்து வந்தார்.
'ஆஷஸ் கிங்'
1992ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானாலும், அணியில் வார்னேவு்ககான இடம் என்பது ஆரம்பக் காலகட்டத்தில் ஊசலாட்டத்தில்தான் இருந்துள்ளது. அந்தச் சூழலில்தான், ஆஸ்திரேலியா அணி 1993ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு ஆஷஸ் கோப்பையை விளையாடச் சென்றது. அணியில் தொடர வேண்டுமென்றால் இந்த ஆஷஸில் தன்னை நிரூபித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் வார்னே இருந்தார்.
ஆனால், அந்தத் தொடர் அவரை அணியின் நிரந்தர வீரராக மாற்றியது. அந்தத் தொடரில் விளையாடிய ஆறு போட்டிகளில் ஒரு ஃபைவர் (Five Wicket Haul) உள்பட 34 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அந்த ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியதற்கு இவரின் பங்களிப்பு அளப்பரியது.
அதுமட்டுமல்லாமல், மான்செஸ்டர் நகரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின், இரண்டாவது நாள் ஆட்டத்தின்போது, இங்கிலாந்து பேட்ஸ்மேன் மைக் கேட்டிங்கிற்கு வீசிய பந்து, 'நூற்றாண்டின் பந்து' (Ball of the Century) என அழைக்கப்படுகிறது.
அந்த பந்து லெக்-திசையில் ஐந்து (அ) ஆறாம் ஸ்டெம்ப் லைனில் இருந்து ஆஃப்-திசையின் முதல் ஸ்டெம்பை தாக்கியது. பந்தின் சுழலைக் கண்டு அதிர்ச்சியடைந்த மைக் கேட்டிங், அதே அதிர்ச்சியில் பெவிலியன் வரை சென்றது இன்றும் கிரிக்கெட் ரசிகரின் மனதில் இருந்து விலகாது.
முரளியும், வார்னேவும்
ஆஸ்திரேலியா அணியின் கோல்டன் பீரியட் என அழைக்கப்படும் 1999-2008 காலகட்டத்தில் அந்த அணியின் துருப்புச்சீட்டாக வார்னே இருந்தார். குறிப்பாக, ஆஸ்திரேலியா வென்ற முதல் உலகக்கோப்பைத் தொடரில் (1999) அதிக விக்கெட்டுகள் (20) வீழ்த்திய வீரராக வார்னே இருந்தார். (அந்தத் தொடரில் நியூசிலாந்து வீரர் ஜெஃப் கெலாட்டும் 20 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது).
ஆஸ்திரேலிய அணிக்கு அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் வார்னே தான். குறிப்பாக, இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளின் ஒன்-ஆஃப் தொடரான ஆஷஸில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர் என்ற பெருமையும் இவரையே சாரும். அவர், 36 ஆஷஸ் போட்டிகளில் விளையாடி 195 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அவருக்கு அடுத்து சகநாட்டு வீரரான மெக்ராத் 157 விக்கெட்டை எடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
இவரும், இவருக்கு சம கால வீரரான முத்தையா முரளிதரனும் போட்டிப்போட்டு கொண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றி வந்தனர். முரளிதரன், ஆசிய கண்டத்தில் பெரும்பாலான மைதானங்களில் விளையாடிருந்தார். ஆனால், இவரோ சுழற்பந்துவீச்சுக்கு பெரிதும் உதவாத ஆஸி., இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற ஆடுகளங்களில் விளையாடினார் என்பது கவனிக்கத்தக்கது. (டெஸ்ட் போட்டி விக்கெட்டுகள்: முரளிதரன் [1992-10] - 800; வார்னே [1992-07] - 708)
சாதனைகளும், சர்ச்சைகளும்
டெஸ்ட் போட்டிகளில் மட்டுமில்லாமல் ஒருநாள் அரங்கிலும் இவருக்கு இணையான ஸ்பின்னரை ஆஸ்திரேலியா இதுவரை கண்டெடுக்கவில்லை. ஸ்டீவ் வாக், ரிக்கி பாண்டிங் ஆஸி., அணியின் வெற்றிக் கேப்டன்களின் படையில் சுழல் தளபதியாக இருந்த இவர், 11 போட்டிகளில் ஆஸி., ஒருநாள் அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார்.
சாதனைக்குப் பெயர் போன இவர், சர்ச்சைகளையும் விட்டுவைக்காதவர். 1994ஆம் ஆண்டு பாகிஸ்தான் தொடரின்போது, தான் மோசமாகப் பந்துவீசினால் , அப்போதைய பாக். கேப்டன் சலீம் மாலிக் தனக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 1.5 கோடி கொடுப்பதாக கூறினார் என்று வார்னே, அவர் குறித்த ஆவணப்படம் ஒன்றில் தெரிவித்திருந்தது சமீபத்தில் சர்ச்சையைக் கிளப்பியது. அதேபோன்று, 2003 உலகக்கோப்பைக்கு முன்னர் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கி ஓராண்டு தடையும் பெற்றுள்ளார்.
இதேபோன்று, 1994ஆம் ஆண்டு, பிட்ச் மற்றும் வானிலை குறித்தான தரவுகளை கொடுப்பதற்கு இந்திய புக்மார்க்கரிடம், தானும், சகநாட்டு வீரர் ஸ்டீவ் வாக்கும் லஞ்சம் பெற்றதாக வார்னே நான்காண்டுகள் கழித்து (1998) ஒப்புக்கொண்டார். அதில், அவர்களுக்கு குறைந்தளவில் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டது.
டெஸ்ட், ஒருநாள் போட்டிகளை விளையாடிய வார்னே சர்வதேச அரங்கில் டி20 போட்டிகளில் விளையாடியதில்லை. ஆனால், ஐபிஎல், பிக்பாஷ் போன்ற உள்ளூர் டி20 தொடர்களிலும் விளையாடி உள்ளார். பந்துவீச்சில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். டெஸ்ட் அரங்கில் 3,154 ரன்களையும், ஒருநாள் அரங்கில் 1,018 ரன்கள் என மொத்தம் சர்வேதச அரங்கில் 4,172 ரன்களைக் குவித்துள்ளார்.
1992 - 2007 என மொத்தம் 15 ஆண்டுக்கால கிரிக்கெட் வாழ்வில் எண்ணற்ற சாதனைகளை புரிந்த இவர், 2007இல் தனது ஓய்வுக்கு பிறகு வர்ணனையாளராகவும் இருந்து வந்தார். முன்பு கூறியது போலவே, ஆஸ்திரேலியாவில் வேகப்பந்துவீச்சிற்கு இருந்த மவுஸிற்கு இணையாக சுழலுக்கும் தனி மரியாதையை அளித்தது இவர்தான். அப்படி பலருக்கும் ஆதர்ஷமாக இருந்த வார்னே, தற்போது மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். 52 வயதில் ஒரு விளையாட்டு வீரர் மாரடைப்பால் இறக்கிறார் என்றால் அது அவ்வளவு எளிதாக கடந்துசெல்லக்கூடியது இல்லை என்பதே நிதர்சனமானது.
இதையும் படிங்க: சுழல் பந்துவீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே காலமானார்