டெல்லி: இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஏழாவது டி20 உலக கோப்பை தொடர் (2021), கரோனா பரவல் காரணமாக இந்தியாவில் நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. அதன் பின்னர், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய இடங்களை இந்தியாவிற்கு மாற்றாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்தது.
யூஏஇயில் உலக கோப்பை
இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடரை இந்தியாவில் நடத்துவதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை என பிசிசிஐ இன்று (ஜுன் 28) உறுதியாக அறிவித்துள்ளது. இதனால், வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகம், ஓமனில் டி20 கிரிக்கெட் உலக கோப்பை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அபாயங்களை தவிர்க்கிறோம்
இன்று நடந்த பிசிசிஐ முக்கிய அலுவலர்களின் கூட்டத்திற்கு பின், பிசிசிஐ-யின் துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா ,"கரோனா பெருந்தொற்று காரணமாக டி20 உலக கோப்பை தொடரை இந்தியாவில் நடத்தவதற்கான வாய்ப்பில்லை. கரோனா மூன்றாம் அலை ஏற்பட வாய்ப்புள்ளது என கூறப்படுவதால், இதனால் ஏற்படும் அபாயங்களை தவிர்ப்பதற்காக இந்த முடிவை பிசிசிஐ எடுத்துள்ளது" என்றார்.
இந்தியாவில் உலக கோப்பை போட்டி நடைபெறாது என்றாலும், டி20 உலக கோப்பையை ஐக்கிய அரபு அமீரகத்தில் பிசிசிஐதான் நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து, ஐசிசி தரப்பில், 'பிசிசிஐ எங்களிடம் டி20 உலக கோப்பை குறித்து முறையாக பதிலளித்த பின்னர், ஐசிசி உலக கோப்பை தொடர் குறித்த பிற முடிவுகளை எடுக்கும்" எனக் கூறியுள்ளது.
ஐபிஎல்-க்கு பின் உலக கோப்பை
ஏற்கனவே, பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021 தொடரை, வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது என்பதால், ஐபிஎல் தொடருக்கு பின்னரே டி20 உலக கோப்பை நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இலங்கைக்கு புறப்பட்டது தவான் - டிராவிட் இந்திய இளம் படை!