பெங்களூரு: ஐபிஎல் தொடரின் 36வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. நடப்பு சீசனில் ஏற்கனவே கொல்கத்தாவுடன் மோதிய பெங்களூரு அணி, 81 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி 4 வெற்றி, 3 தோல்விகளை சந்தித்துள்ளது.
பெங்களூரு அணியின் கேப்டன் டுபிளெஸ்ஸிக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் 2 போட்டிகளில் பேட்டிங் மட்டும் செய்துவிட்டு, இரண்டாவது இன்னிங்சில் ஓய்வெடுத்தார். இதனால் பெங்களூரு அணியின் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டார். இன்றைய போட்டியிலும் பெங்களூரு அணியை விராட் கோலி வழிநடத்துவார் என எதிர்பார்க்கலாம்.
மூவர் கூட்டணி: பேட்டிங்கை பொறுத்தவரை டு பிளெஸ்ஸி, கோலி, மேக்ஸ்வெல் ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றனர். இவர்கள் 3 பேரை நம்பித்தான் பேட்டிங் வரிசையே உள்ளது. நடப்பு சீசனில் 5 அரைசதங்களை விளாசியுள்ள டு பிளெஸ்ஸி, 405 ரன்கள் குவித்துள்ளார். கோலி 4 அரைசதங்களுடன் 279 ரன்கள், மேக்ஸ்வெல் 253 ரன்கள் எடுத்துள்ளனர். எனினும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன் சேர்க்க தவறுகின்றனர். லோம்ரோர், தினேஷ் கார்த்திக், பிரபுதேசாய் எளிதில் விக்கெட்டை பறிகொடுப்பது பெங்களூரு அணிக்கு பின்னடைவாக உள்ளது.
பந்துவீச்சில் முகமது சிராஜ், ஹர்ஷல் படேல், டேவிட் வில்லே ஆறுதல் அளிக்கின்றனர். ஹசரங்கா, வைசாக் பந்துவீச்சில் கூடுதல் கவனம் செலுத்தினால் மட்டுமே கொல்கத்தா அணியின் ரன்வேகத்தை கட்டுப்படுத்த முடியும். ஏற்கனவே கடந்த போட்டியில் கொல்கத்தாவிடம் 81 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததால் அதற்கு பழிதீர்க்க பெங்களூரு அணி மும்முரம் காட்டும். மேலும், ராஜஸ்தானை வீழ்த்திய உத்வேகத்துடன் இருக்கும் பெங்களூரு அணிக்கு இன்றைய ஆட்டம் சொந்த மண்ணில் நடைபெறுவது கூடுதல் பிளஸ்.
மீண்டு வருமா கொல்கத்தா?: இதேபோல், நடப்பு சீசனில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி 2 வெற்றி, 5 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. இதனால் அந்த அணி கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. பேட்டிங்கை பொறுத்தவரை ஜேசன் ராய், ரிங்கு சிங் நம்பிக்கை அளிக்கின்றனர். சென்னைக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் 26 பந்துகளில் 61 ரன்களை குவித்து மிரட்டினார் ஜேசன் ராய். மும்பைக்கு எதிரான போட்டியில் சதம் விளாசிய வெங்கடேஷ் ஐயர், அதன்பின் பெரிய அளவில் ரன் சேர்க்க தவறுகிறார்.
கேப்டன் நிதிஷ் ராணா, ஜெகதீசன், ரசல், சுனில் நரேன் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிப்படுத்த தவறுகின்றனர். பந்து வீச்சாளர்களும் உரிய பங்களிப்பை கொடுப்பதில்லை. அனுபவ வீரர் உமேஷ் யாதவ் 7 போட்டிகளில் விளையாடி ஒரு விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார். ஒட்டுமொத்த அணியும் முழு திறனை வெளிப்படுத்தினால் மட்டுமே, பெங்களூரு அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்ள முடியும்.
ஆட்டம் எங்கே?: பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் இன்றைய லீக் ஆட்டம், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
நேருக்கு நேர்: ஐபிஎல் வரலாற்றில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணி இதுவரை 31 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் பெங்களூரு அணி 14, கொல்கத்தா 17 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. நடப்பு சீசனில் ஏப்ரல் 6ம் தேதி இரு அணிகளும் மோதிய நிலையில், கொல்கத்தா அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பெங்களூரு உத்தேச அணி: விராட் கோலி (கேப்டன்), டு பிளெஸ்ஸி, லோம்ரோர், மேக்ஸ்வெல், பிரபுதேசாய், சபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக், ஹசரங்கா, ஹர்ஷல் படேல், டேவிட் வில்லே, முகமது சிராஜ், வைசாக்/கரண் சர்மா.
கொல்கத்தா உத்தேச அணி: ஜேசன் ராய், ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா (கேப்டன்), ரிங்கு சிங், ஆந்த்ரே ரசெல், சுனில் நரைன், டேவிட் வீஸ்/ஃபர்குசன்/சவுத்தி, உமேஷ் யாதவ், கெஜ்ரோலியா/வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி, சுயாஷ் சர்மா.