மகாராஷ்டிராவில் ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் நடந்து வருகிறது. நேற்று (மார்ச் 30) ஆறாவது லீக் ஆட்டம் மும்பை டிஒய் படில் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இந்த ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலபரீட்சை நடத்தின.
முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணி வீரர்கள், பெங்களூரு பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
அப்படி போராடி 18.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ரன்களை மட்டுமே சேர்ந்தனர். அதிகபட்சமாக ஆண்ட்ரே ரஸ்ஸல் மட்டுமே 18 பந்துகளுக்கு 25 ரன்களை எடுத்தார். மறுபுறம் பந்துவீச்சில் ஹசராங்கா 4 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தினர்.
இதையடுத்து 129 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு பெங்களூரு அணி வீரர்கள் களமிறங்கினர். தொடக்க ஆட்டகாரரான அனுஜ் ராவத் 2 பந்துகளில் ரன்களின்றி ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் டுபிளசிஸ் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இப்படி பெங்களூரு அணி தடுமாறி கொண்டிருந்தபோது ரூதர்ஃபோர்ட், ஷாபாஸ் அகமது இருவரும் நிதானமாக ஆடி 55 ரன்களை குவித்தனர். இறுதியில் 19.2 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களை எடுத்து பெங்களூரு அணி வெற்றிபெற்றது. கொல்கத்தா அணியின் டிம் சௌதி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதையும் படிங்க: ஆர்சிபி பவுலிங்; கேகேஆரில் மாவிக்கு பதில் சௌதி!