சென்னை: இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (ஏப்ரல்.9) தொடங்கியது. பார்வையாளர்களுக்கு அனுமதியின்றி நடந்த இந்த போட்டியில், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சைத் தேர்வு செய்தார். மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, கிரிஸ் லின் ஆகியோர் களமிறங்கினர். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா, சாஹல் வீசிய மூன்றாவது ஓவரின் கடைசி பந்தில் விராட் கோலியால் ரன் அவுட் செய்யப்பட்டார்.
ரோஹித் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்திய களிப்பில் பெங்களூரு அணி முனைப்புடன் விளையாடத் தொடங்கியது. இந்நிலையில், சுதாரித்துக் கொண்டு ஆடிய கிரிஷ் லின், 35 பந்துகளில் 49 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வாஷிங்டன் சுந்தரிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி பந்து வீச்சாளர் ஹர்சல் படேல் வீசிய பந்துகளில் எல்.பி.டபில்யூ முறையில் இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தங்கள் விக்கெட்டை இழந்தனர்.
பொல்லார்டும் மிகவும் சொற்ப ரன்களில் வாஷிங்டன் சுந்தரிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்து நடையைக் கட்டினார். இதனால், மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்திருந்தது. 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு பேட்டிங் செய்யத் தொடங்கியது.
தொடக்க வீரர்களாக விராட் கோலி, வாசிங்டன் சுந்தர் ஆகியோர் களமிறங்கினர். கிரிஸ் லின்னை அவுட்டாக்கிய வாஷிங்டன் சுந்தர், கிருனால் பாண்டியா பந்து வீச்சில், கிரிஷ் லின்னிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார். 29 பந்துகளில் 33 ரன்கள் அடித்திருந்த விராட் கோலி, பும்ராவின் பந்து வீச்சில் எல்.பி.டபில்யூ முறையில் விக்கெட் இழந்து வெளியேறினார்.
இந்தியாவுக்கான ஐபிஎல் போட்டிகளில் பணத்தை வாங்கிக் கொண்டு விடுமுறைக்கு வந்தார்போல சுமாராக விளையாடுகிறார் என விமர்சிக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல், 28 பந்துகளை எதிர்கொண்டு 39 ரன்கள் எடுத்தார். எப்பேர்பட்ட பந்து வீச்சுகளையும் எதிர் கொண்டு ரன்களை குவிக்கும் வல்லமை படைத்த டி வில்லியர்ஸ் முக்கிய வீரர்கள் அவுட்டானதைத் உணர்ந்து, அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்லும் நோக்கில் பொறுமையாக ரன்களை சேர்க்கத் தொடங்கினார். இவர் 27 பந்துகளில் 48 ரன்கள் அடித்திருந்த நிலையில் அரைசதம் அடிக்க முடியாமல் தன் விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார். தொட்டுவிடும் தூரத்தில் வெற்றி இருந்த நிலையில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் முக்கிய வீரர் ஆட்டமிழந்ததால், அணியின் வெற்றி கேள்விக்குறியாகி அனைவரையும் பதற்றம் தொற்றிக் கொண்டது.
இறுதியில் களமிறங்கிய ஹர்ஷல் படேல், முகமத சிராஜ் கூட்டணி வெற்றி இலக்கான 160 ரன்களை எடுத்து ஆட்டத்தை வெற்றியுடன் நிறைவு செய்தது. இதன்மூலம், நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை, 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, இந்த ஐபிஎல் தொடரில் தன் வெற்றிக் கணக்கைத் தொடங்கியது.
இதையும் படிங்க: IPL 2021: ஹாட்ரிக் வெற்றி, முதல் கோப்பை: இரு கனவுகளுடன் மும்பை - ஆர்சிபி பலப்பரீட்சை