ஹைதராபாத்: 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (மே 25) நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் மும்பை அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 2வது தகுதிச்சுற்று ஆட்டத்துக்கு முன்னேறியிருக்கிறது.
மிரட்டிய மத்வால்: டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 8 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேமரூன் க்ரீன் 41, இம்பேக்ட் பிளேயராக களம் இறங்கிய சூர்யகுமார் யாதவ் 33 ரன்களும் எடுத்தனர். அதன் பிறகு களம் இறங்கிய லக்னோ அணி 101 ரன்களுக்கு சுருண்டதுடன், நடப்பு சீசனில் இருந்து வெளியேறியது. மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வால், லக்னோ அணி தோல்வி அடைய முக்கிய துருப்புச்சீட்டாக இருந்தார்.
வெறும் 5 ரன்களை விட்டுக் கொடுத்து தொடக்க ஆட்டக்காரர் மன்கட், படோனி, நிகோலஸ் பூரன், பீஷ்னோய், மொஷின் கான் ஆகியோரது விக்கெட்களை வீழ்த்தி, லக்னோ அணியை நிலைகுலைய செய்தார் ஆகாஷ் மத்வால். கைல் மேயர்ஸ்(18), மன்கட் (3), க்ருணல் பாண்ட்யா (8) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது லக்னோ அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.
3 'ரன் அவுட்கள்': மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்டொய்னிஸ் 40 ரன்கள் எடுத்து நம்பிக்கை அளித்தார். 2 ரன்கள் எடுப்பதற்காக அவர் ஓடிய போது, சக வீரர் தீபக் ஹூடா மீது எதிர்பாராத விதமாக மோதியதால் ரன் அவுட் ஆனார். இதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அடுத்து களம் இறங்கிய நிகோலஸ் பூரன், டக் அவுட் ஆனதும் லக்னோ அணியின் நம்பிக்கை தவிடு பொடியானது.
இந்த அதிர்ச்சியில் இருந்து லக்னோ ரசிகர்கள் மீள்வதற்குள் தீபக் ஹூடா (15), கிருஷ்ணப்பா கவுதம் (2) அடுத்தடுத்து ரன் அவுட் ஆனது லக்னோ அணியின் தோல்வியை உறுதி செய்துவிட்டது. ஸ்டொய்னிஸை தவிர பிற வீரர்கள், விரைவில் விக்கெட்டை இழந்ததே லக்னோ அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
யார் இந்த ஆகாஷ் மத்வால்?: மும்பை அணியின் பந்துவீச்சாளர் ஆகாஷ் மத்வால் 3.3 ஓவர்கள் வீசி 5 ரன்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். தீபக் ஹூடா ரன் அவுட் ஆகவும் காரணமாக இருந்தார். உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த ஆகாஷ் மத்வால், இன்ஜினியர் ஆவார். தனது பந்துவீச்சு குறித்து அவர் கூறுகையில், "வாய்ப்பு கிடைக்கும் நான் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டேன். டென்னிஸ் பந்தில் தொடர்ந்து பயிற்சி செய்து கொண்டிருந்தேன். இன்ஜினியர்கள் எதையும் விரைவில் கற்றுக் கொள்வார்கள். என்னை நினைத்து நான் பெருமை கொள்கிறேன்" என கூறினார்.
'முழு பொறுப்பேற்கிறேன்': லக்னோ அணியின் கேப்டன் க்ருணல் பாண்ட்யா கூறுகையில், "நடப்பு சீசனில் எங்கள் அணி நல்ல நிலையில் தான் இருந்தது. இருப்பினும் தோல்வியை சந்தித்துள்ளோம். இந்த தோல்விக்கு நான் முழு பொறுப்பேற்றுக் கொள்கிறேன். நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிவிட்டோம்" என கூறியுள்ளார்.
கலாய்க்கும் மும்பை வீரர்கள்: இந்நிலையில் லக்னோ அணி வீரர் நவீன் - உல் - ஹக்கை ட்ரோல் செய்து மும்பை அணி வீரர்கள் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 3 மாம்பழங்களை வைத்துக் கொண்டு மும்பை வீரர்கள் விஷ்ணு வினோத், சந்தீப் வாரியர், குமார் கார்த்திகேயா ஆகியோர் அமர்ந்திருக்கின்றனர். ஒருவர் கண்ணையும், மற்றொருவர் வாய், வேறொருவர் காதையும் மூடியிருப்பது போல் புகைப்படத்தில் உள்ளனர். 'மாம்பழங்களின் இனிதான பருவம்' என அதற்கு கேப்ஷனும் எழுதியுள்ளனர்.
நடப்பு சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர் விராட் கோலிக்கும், லக்னோ அணி வீரர் நவீன் உல் ஹக்கிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதேபோல் லக்னோ அணியின் ஆலோசகர் கம்பீர் மற்றும் கோலி இடையேயும் உரசல் ஏற்பட்டது. அதன்பிறகு பெங்களூரு அணி தோல்வி அடையும் போதெல்லாம், சமூக வலைதளங்களில் மாம்பழங்களின் படங்களை பதிவிடும் நவீன் உல் ஹக் “இன்பமாய் இருக்கிறது“ என பதிவு செய்து வந்தார். அதற்கு பதிலடியாகவே மும்பை அணி வீரர்கள் இதுபோன்று செய்துள்ளதாக கூறப்படுகிறது.
2ம் தகுதிச்சுற்று: இதற்கிடையே, நாளை (மே 25) நடைபெறும் இரண்டாவது தகுதிச்சுற்று ஆட்டத்தில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.