ஐபிஎல் தொடரில், பணக்காரர் முகேஷ் அம்பானியின் அணியான மும்பை இந்தியன்ஸுக்கு புதிய பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மார்க் பவுச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே பயிற்சியாளராக இருந்த இலங்கையைச் சேர்ந்த மஹேலா ஜெயவர்த்தனேவுக்கு , மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் GLOBAL HEAD பதவி வழங்கி இருப்பதால், புதிய பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த நிலையில் முன்னாள் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரும் , பயிற்சியாளருமான மார்க் பவுச்சர் தலைமைப் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2019இல் இருந்து தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளராக மார்க் பவுச்சர் செயல்பட்டு வந்தார். அவரது தலைமையில் தென் ஆப்பிரிக்கா அணி டெஸ்டில் 11 வெற்றிகளையும், 12 ஒரு நாள் போட்டிகளிலும், 23 டி-20 போட்டிகளிலும் வெற்றி கண்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி-20 உலகக் கோப்பைத்தொடருக்கு குறைவான நாட்களே உள்ள நிலையில், மார்க் பவுச்சர் தென் ஆப்பிரிக்கா தேசிய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகி மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைய இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளத்தில் கிரிக்கெட் ஆர்வலர்கள், தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் மார்க் பவுச்சரை கடுமையாக சாடியுள்ளனர். நாட்டுக்காக பணி செய்வதை திடீரென துறந்துவிட்டு, பணம் கொழிக்கும் ஐபிஎல் தொடரில் இணைவது எந்த விதத்தில் சரி எனவும்; உங்களது முடிவு டி-20 உலகக்கோப்பைத்தொடரில் வீரர்கள் மத்தியில் பிரதிபலிக்கும் எனவும் பதிவிட்டுள்ளனர்.
ஏபிடி வில்லியர்ஸ், பாப் டூ பிளெஸிஸ், பிலாந்தர், ஸ்டெய்ன், மார்ன் மார்க்கல் போன்றோரின் விலகலுக்கு பிறகு இளம் வீரர்களை கொண்டு சற்று தடுமாறி வரும் தென்னாப்பிரிக்க அணியை இப்படி இக்கட்டான சூழலில் விட்டுச்செல்வது நியாயமா என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
இப்படியான புலம்பல் தற்போது மட்டுமல்ல ஐபிஎல் தொடங்கிய சில காலத்தில் இருந்தே தொடர் கதையாகி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளர், தங்களது வீரர்கள் நாட்டுக்காக விளையாடுவதை விட ஐபிஎல் விளையாடுவதை பிரதானமாக கருதுகின்றனர் எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டென்னிஸ் விளையாட்டில் கோடிகளில் புரண்ட ரோஜர் பெடரர் - பரிசுத்தொகை விவரம்!