மொகாலி: 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 38வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. தோள்பட்டை காயம் காரணமாக கடந்த சில ஆட்டங்களில் விளையாடாத, பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் அணிக்குத் திரும்பி இருக்கிறார்.
இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் வாரியத்தின் ஐஎஸ் பிந்திரா ஸ்டேடியத்தில் வைத்து நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் தவான், முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனால் பேட்டிங்கில் களம் இறங்கிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஸ்டோய்னிஸ் மற்றும் மாயர்ஸ் அரை சதம் கடந்து 72 மற்றும் 54 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனர்.
அதேபோல், புரான் 45 மற்றும் ஆயூஷ் பதானி 43 ஆகிய ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 257 ரன்கள் எடுத்தது. அதேபோல், பஞ்சாப் அணியின் ரபாடா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதனைத் தொடர்ந்து 258 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிரப்சிங்கர் சிங் 9 மற்றும் ஷிகர் தவான் 1 என்ற சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதனையடுத்து அதர்வா டைடே அரை சதம் கடந்து 66 ரன்கள் மற்றும் ஸ்ரீகர் ராஜா 36 ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதனால் இது வரையிலான ஆட்டத்தின் 14 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புடன் 140 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணி போராடி வருகிறது.
லக்னோ அணி: கே.எல்.ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், ஸ்டொய்னிஸ், தீபக் ஹூடா, குருணல் பாண்ட்யா, நிகோலஸ் பூரன், படோனி, நவீன்-உல்-ஹக், ரவி பீஷ்னோய், ஆவேஷ் கான், யஷ் தாகூர்.
பஞ்சாப் அணி: ஷிகர் தவான் (கேப்டன்), அதர்வா தைடே, சிக்கந்தர் ராசா, லிவிங்ஸ்டோன், சாம் கரன், ஜிதேஷ் சர்மா, ஷாருக்கான், ரபாடா, ராகுல் சாஹர், குர்னூர் பிரார், அர்ஷ்தீப் சிங்.
முன்னதாக, ஐபிஎல் 2023 போட்டியின் இது வரையிலான லீக் ஆட்டத்தில் 7 போட்டிகளில் விளையாடி உள்ள லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 4 வெற்றி - 3 தோல்வி என 8 புள்ளிகள் உடன் புள்ளிப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. அதேபோல், 4 வெற்றி - 3 தோல்வி என 7 போட்டிகளில் விளையாடி உள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.
இதையும் படிங்க: CSK Vs RR : சொந்த ஊரில் கெத்து காட்டிய ராஜஸ்தான்! புள்ளி பட்டியலில் சென்னைக்கு சறுக்கல்!