ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனில் மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதுவரை 8 லீக் ஆட்டங்கள் முடிந்த நிலையில், இன்று (ஏப்ரல் 2) 9ஆவது லீக் ஆட்டம் மும்பை டிஒய் படில் மைதானத்தில் நடந்தது. இதில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலபரீட்சை நடத்தின. முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
ஜோஸ் பட்லர் சதம்: அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணி வீரர்கள் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்களை குவித்தனர். அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 68 பந்துகளுக்கு 100 ரன்களை எடுத்து அசத்தினார். இதையடுத்து 194 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு மும்பை அணி வீரர்கள் களமிறங்கினர்.
ரோஹித் தடுமாற்றம்: மும்பை அணியின் தொடக்க ஆட்டக்கரரான ரோஹித் சர்மா 5 பந்துகளிலேயே 10 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அவருடன் களமிறங்கிய இஷான் கிஷன் அதிரடியாக ஆடி 43 பந்துகளில் 54 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய திலக் வர்மா 33 பந்துகளுக்கு 61 ரன்களை எடுத்து அணிக்கு வலுசேர்ந்தார்.
கீரன் பொல்லார்ட் போராடி 24 பந்துகளுக்கு 22 ரன்களை எடுத்தார். இறுதியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றது. மறுபுறம் ராஜஸ்தான் அணி பந்துவீச்சாளர்கள் சாஹல், நவ்தீப் சைனி இருவரும் தலா 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினர்.
10ஆவது லீக் ஆட்டம்: இதனிடையே தொடரின் 10ஆவது லீக் ஆட்டம் புனே எம்சிஏ மைதானத்தில் நடந்துவருகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இதையும் படிங்க: MI vs RR: மும்பைக்கு 194 ரன்கள் இலக்கு... ஜோஸ் பட்லர் சதம்...