மும்பை:15ஆவது ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப். 18) லீக் போட்டியில், ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பங்கேற்றன. மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வுசெய்தது.
பவர் காட்டிய பட்லர்: இதன்படி, முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு பட்லர் - படிக்கல் இணை சிறப்பான தொடக்கத்தை அளித்தது. இந்த ஜோடி, பவர்பிளே முடிவில், விக்கெட் இழப்பின்றி 60 ரன்களை குவித்து வலுவான அடித்தளத்தை அமைத்தது. குறிப்பாக, பட்லர் எல்லா திசைகளிலும் பவுண்டரிகளை பறக்கவிட்டார். அவர் வெறும் 29 பந்துகளில் அரைசதம் கடந்து அனைவரையும் அசரடித்தார்.
மறுமுனையில் நிதானம் காட்டிவந்த படிக்கல் 24 (18) ரன்களில் நரைன் சுழலில் சிக்கினார். அடுத்த வந்த கேப்டன் சஞ்சு பட்லருக்கு பக்கபலமாக இருந்து ரன்களை சேர்த்தார். அவர் 19 பந்துகளில் 3 பவுண்டரிகள், 2 சிக்கர்கள் என 38 ரன்களை விரைவான கேமியா இன்னிங்ஸ் ஆடி வெளியேறினார்.
2ஆவது சதம்: அசராமல் நாலாபுறத்திலும் ஓட்டங்களைச் சேர்த்து வந்த பட்லர், இந்த தொடரில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். சதம் கடந்து இரண்டாவது பந்திலேயே அவர் கம்மின்ஸிடம் ஆட்டமிழந்தார். அவர் 61 பந்துகளைச் சந்தித்து 9 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் உள்பட 103 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, வந்த ஹிட்மயர் சிறிதுநேரம் அதிரடி காட்ட ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்களை எடுத்தது. கொல்கத்தா பந்துவீச்சில் நரைன் 2 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ், சிவம் மாவி, ரஸ்ஸல் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
நரைன் 'டக்': 218 என்ற பெரிய இலக்கை நோக்கி கொல்கத்தா களம் கண்டது. ஆட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே அதிரடியைத் தொடங்க வேண்டும் என்ற வியூகத்தில் சுனில் நரைன் ஓப்பனிங் பேட்டராக இறக்கப்பட்டார். இருப்பினும், துரதிருஷ்டவசமாக ஆட்டத்தின் முதல் பந்திலேயே நரைன் ரன்-அவுட்டாகி ஆட்டமிழந்தார்.
ஃபின்ச் - ஷ்ரேயஸ்: அதற்குப் பின், ஓப்பனர் ஆரோன் ஃபின்ச் உடன் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் ஜோடி சேர்ந்து ராஜஸ்தான் பந்துவீச்சை ஒரு கைபார்த்தனர். இருவரும் இரண்டாம் விக்கெட் பார்ட்ஷிப்பாக 53 பந்துகளில் 107 ரன்களை குவித்தனர். அரைசதம் கடந்திருந்த ஃபின்ச் 58 (28) ரன்களில் பிரசித் கிருஷ்ணாவிடம் வீழ்ந்தார்.
ஏமாற்றிய மிடில்-ஆர்டர்: அவரை தொடர்ந்து வந்த மிடில்-ஆர்டர் பேட்டர்கள் நிதிஷ் 18 (11), ரஸ்ஸல் 0 (1) ஆகியோர் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். ஒருபக்கம், ஷ்ரேயஸ் மட்டும் தனியாளாக நின்று பவுண்டரிகளுடன் ஸ்கோரை சீராக உயர்த்தி வந்தார்.
ஹாட்ரிக் எடுத்த சஹால்:இந்நிலையில், சஹால் 17ஆவது ஓவரை வீச வந்தார். முதல் பந்திலேயே வெங்கடேஷ் ஐயரை 6 (7) வெளியேற்றி சஹால் அதிர்ச்சி கொடுத்தார். ஆனால், அவரின் விக்கெட் வேட்டை அத்தோடு நிற்கவில்லை. முரட்டு ஃபார்மில் இருந்த ஸ்ரேயஸ் ஐயரை, 4ஆவது பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டாக்கினார்.
அவர் 51 பந்துகளில் 4 சிக்சர்கள், 7 பவுண்டரிகள் என 85 ரன்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, அந்த ஓவரின் 5ஆவது, 6ஆவது பந்துகளில் சிவம் மாவி, பாட் கம்மின்ஸ் ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றிய சஹால், தனது முதல் ஹாட்ரிக் சாதனையைப் பதிவுசெய்தார்.
மேலும், இந்த ஓவருக்கு முன்னர் வரை 3 ஓவர்களை வீசி 1 விக்கெட்டை மட்டும் கைப்பற்றி 38 ரன்களை விட்டுக்கொடுத்திருந்தார். ஆனால், டெத் ஓவரில் வந்து வெறும் 2 ரன்களை மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மாஸ்டர்-கிளாஸ் ஃபர்பாமன்ஸை வழங்கினார்.
நம்பிக்கை அளித்த உமேஷ்: சஹாலின் அந்த ஓவரில் ஆட்டம் முடிந்து ராஜஸ்தான் பக்கம் வந்துவிட்டது என்ற நினைத்த நேரத்தில், உமேஷ் யாதவ் போல்ட் 18ஆவது ஓவரில் 2 சிக்சர், 1 பவுண்டரியை பறக்கவிட்டு ஆட்டத்தை விறுவிறுப்பாக்கினார். பிரசித் வீசிய 19ஆவது ஓவரில், உமேஷ் - ஷெல்டன் ஜாக்சன் இணை 7 ரன்களை சேர்க்க, கடைசி ஓவரில் கொல்கத்தா அணி வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது.
லக் இல்லாத லாஸ்ட் ஓவர்: அந்த ஓவரை ஓபேட் மெக்காய் வீசினார். அதுவரை அபாரமாக ஆடி வந்த உமேஷ் - ஜாக்சன் இணை, கடைசி ஓவரில் கொல்கத்தா ரசிகர்களை ஏமாற்றிவிட்டது. அந்த ஓவரின் 2ஆவது பந்தில் ஜாக்சனும், நான்காவது பந்தில் உமேஷ் யாதவும் அவுட்டாக, கொல்கத்தா அணி 210 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.
இதன்மூலம், விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் பந்துவீச்சில் சஹால் 5 விக்கெட்டுகளையும், மெக்காய் 2 விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா, அஸ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். அபாரமாகப் பந்துவீசிய சஹால் ஆட்டநாயகனாகத் தேர்வானார்.
புள்ளிப்பட்டியலும் இன்றைய போட்டியும்: இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி 8 புள்ளிகளுடன் (4 வெற்றி, 2 தோல்வி) 2ஆவது இடத்திலும், கொல்கத்தா அணி 6 புள்ளிகளுடன் (3 வெற்றி, 4 தோல்வி) 6ஆவது இடத்திலும் உள்ளன. ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில், லக்னோ - பெங்களூரூ அணிகள் மோதுகின்றன. இப்போட்டி நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது.
இதையும் படிங்க: சாதிக்கவேண்டிய இளம்புயல்... காலம் நிகழ்த்திய கோலம்... யார் இந்த விஷ்வா தீனதயாளன்!