ஜெய்ப்பூர் : 16வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 52வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், ஐதராபாத் சன்ரைசைஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ராஜஸ்தான் அணியின் இன்னிங்சை யாஷ்வி ஜெய்ஸ்வால், ஜாஸ் பட்லர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர். யாஷ்வி ஜெய்ஸ்வால் 35 எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பட்லருடன் சேர்ந்து ஐதராபாத் பந்துவீச்சை நாலாபுறமும் விளாசினார்.
ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டுக்கு அனுப்பிய இந்த ஜோடி ராஜஸ்தான் அணியின் ரன் கணக்கை ராக்கெட் வேகத்தில் கொண்டு சென்றது. சதத்தை நோக்கி சென்று கொண்டு இருந்த ஜாஸ் பட்லர் 95 ரன்களில் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யு ஆகி வெளியேறினார். மறுபுறம் கேப்டன் சஞ்சு சாம்சன் அரை சதம் கடந்தார்.
20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் குவித்தது. கேப்டன் சஞ்சு சாம்சன் 66 ரன்களுடனும், ஹெட்மயர் 7 ரன்களுடனும் களத்தில் நின்றனர். 215 என்ற கடினமான இலக்கை நோக்கி ஐதராபாத் அணி விளையாடியது. ஐதராபாத் அணியிலும் தொடக்க ஜோடி அன்மோல்பிரித் சிங், அபிஷேக் சர்மா ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு அரை சதம் விளாசி நல்ல தொடக்க அமைத்துக் கொடுத்தனர்.
அன்மோல்பிரித் சிங் 33 ரன், அரை சதம் விளாசிய அபிஷேக் சர்மா 55 ரன், ராகுல் திரிபாதி 47 ரன் என வீரர்கள் தங்கள் பங்குக்கு ரன் குவித்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய கேப்டன் எய்டன் மார்க்ராமும் 6 ரன்களில் யுஸ்வேந்திர சாஹல் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார்.
ராகுல் திரிபாதி 3 சிக்சர்களுடன் 47 ரன்கள் எடுக்க விக்கெட் கீப்பர் கிளாசன் 2 சிக்சர் மற்றும் பவுண்டரியுடன் 12 பந்தில் 26 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டபோது அதனை ராஜஸ்தானின் சந்தீப் சர்மா வீசினார். முதல் பந்தில் ஐதராபாத் அணியின் அப்துல் சமத் 2 ரன்கள் எடுக்க அடுத்த பந்தில் சிக்சர் பறந்தது. 3 ஆவது பந்தில் 2 ரன்களும், 4 மற்றும் 5 ஆவது பந்துகளில் தலா 1 ரன்னும் எடுக்கப்பட்டன.
கடைசி பந்தில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற 5 ரன்கள் தேவைப்பட்டபோது அதை லாங் ஆஃப் திசையில் அப்துல் சமத் அடிக்க, பந்து கேட்ச் செய்யப்பட்டது. இருப்பினும், அதனை நோ பாலாக அறிவித்த நடுவர், அதற்கு ஃப்ரீ ஹிட் கொடுத்தார். இதனால் கடைசி பந்தில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற 4 ரன்கள் தேவைப்பட்டபோது, சிக்சர் அடித்து சமத் அணியை வெற்றி பெற வைத்தார்.
இதையும் படிங்க : GT vs LSG: சாஹா, கில் அதிரடி...சரவெடி - குஜராத் அணி அபார வெற்றி!