மகாராஷ்டிராவில் ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (மார்ச் 28) 4ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய லக்னோ அணி வீரர்கள் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களை எடுத்தனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கே.எல். ராகுல், குயிண்டன் டி காக் 10 ரன்கள் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தனர். குறிப்பாக கே.எல். ராகுல் முதல் பந்திலேயே விக்கெட்டானார். அதேபோல எவின் லிவிஸ் 10 ரன்களிலும் மனிஷ் பாண்டே 7 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதையடுத்து களமிறங்கிய தீபக் ஹூடா அதிரடியாக ஆடி 41 பந்துகளில் 55 ரன்களை எடுத்தார். மறுபுறம் ஆயுஷ் படோனி 41 பந்துகளுக்கு 54 ரன்களை குவிந்தார். குஜராத் அணி பந்துவீச்சாளர் முகமது ஷமி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
குஜராத் அணி முதலில் தடுமாற்றம்: 159 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய குஜராத் அணியின் வீரர்கள் ஆரம்பத்தில் சற்று தடுமாறினர். தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 3 பந்துகளில் ரன்களின்றி ஆட்டமிழந்தார். அவருடன் களமிங்கிய மேத்யூ வேட் சிறிது நிதானமாக ஆடி 29 பந்துகளுக்கு 30 ரன்களை எடுத்து விக்கெட்டை இழந்தார்.
மூன்றாவதாக களமிறங்கிய விஜய் சங்கர் 4 ரன்களில் கிளம்பினார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிரடியான ஆட்டம் மூலம் 28 பந்துகளுக்கு 33 ரன்களை குவித்தார். அவருடன் களமிறங்கிய டேவிட் மில்லரும் 21 பந்துகளுக்கு 30 ரன்களை எடுத்தார். குறிப்பாக ராகுல் டேவாட்டியா 24 பந்துகளில் 40 ரன்களை குவித்து அணிக்கு வலுசேர்த்தார். இறுதியாக குஜராத் அணி 19.4 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: IPL 2022: சதத்தை தவறவிட்ட டுபிளசிஸ்!