லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஏகனா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் ஐபிஎல் தொடரின் 3ஆவது லீக் போட்டி இன்று (ஏப்ரல் 1) தொடங்கியது. இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர், பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
அதன்படி லக்னோ அணியின் பேட்டர்கள் களமிறங்கி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 193 ரன்களை குவித்தனர். அதிகபட்சமாக கைல் மேயர்ஸ் 38 பந்துகளுக்கு 73 ரன்களை குவித்து அணிக்கு வலுசேர்த்தார். அதேபோல நிக்கோலஸ் பூரன் 21 பந்துகளுக்கு 36 ரன்களையும், தீபக் ஹூடா 18 பந்துகளுக்கு 17 ரன்களையும் எடுத்திருந்தனர்.
பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட கேப்டன் கேஎல் ராகுல் 12 பந்துகளுக்கு 8 ரன்களை மட்டுமே எடுத்தார். மறுபுறம் பந்துவீச்சில் டெல்லி அணியின் கலீல் அகமது, சேத்தன் சகாரியா தலா 2 விக்கெட்டுகளையும், அக்சர் படேல், குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினர்.
அந்த வகையில் 194 ரன்கள் வெற்றி இலக்குடன் டெல்லி கேபிடல்ஸ் அணி பேட்டிங்கை தொடங்கியது. ஆரம்பம் முதலே பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. முதலாவதாக களமிறங்கிய பிருத்வி ஷா 9 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 12 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.
கேப்டன் டேவிட் வார்னர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், ரன்களை குவிக்க முடியவில்லை. இவர் ஆட்டமிழக்காமல் ஆட இவருக்கு அடுத்து வந்த மிட்செல் மார்ஷ், சர்பராஸ் கான் முறையே 0, 4 ரன்களுடன் விக்கெட்டை பறிகொடுத்து அதிர்ச்சியளித்தனர்.
5ஆவதாக களமிறங்கிய ரிலீ ரோசோவ் 30 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த ரோவ்மன் பவல்லும் எல்பிடபிள்யூவாகி ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் 143 ரன்கள் மட்டுமே சேர்த்த டெல்லி அணி தோல்வியை தழுவியது. ஆட்டத்தில் முழு ஆதிக்கம் செலுத்திய மார்க்கவுட் 5 விக்கெட் வீழ்த்தி டெல்லி அணியின் கோட்டையை தகர்த்தார்.
இதையும் படிங்க: TATA IPL 2023: எந்த தேதியில், எந்த அணி களம் காணும்.. முழு அட்டவணை.