ஐபிஎல் தொடரின் 12ஆவது லீக் போட்டியில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருத்துராஜ் கெய்க்வாட்டும், டூப்ளெஸ்ஸியும் களமிறங்கினர்.
கடந்த சீசனில் தனக்கு கிடைத்த வாய்ப்பில் கலக்கிய ருத்துராஜ் கெய்க்வாட் இன்றைய போட்டியிலும் கலக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 3.5ஆவது ஓவரில் சென்னை அணி 25 ரன்களை எடுத்திருந்தபோது முஸ்தாபிசூர் ரஹ்மான் பந்துவீச்சில் கெய்க்வாட் 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய மொயின் அலியுடன் ஜோடி சேர்ந்த டூப்ளெஸ்ஸிஸ் 33 ரன்களில் வெளியேறினார். அவர் வெளியேறியவுடன் மொயின் அலி ராகுல் தெவாட்டியா பந்துவீச்சில் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் நெருக்கடியை சந்தித்த சென்னை அணிக்காக ரெய்னாவும், அம்பத்தி ராயுடுவும் கை கோர்த்தனர்.
இந்த ஜோடி ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை திறம்பட சமாளித்தது. இச்சூழலில், 27 ரன்கள் எடுத்திருந்த ராயுடு ஆட்டமிழந்தார். ராயுடுவை வீழ்த்திய சக்காரியா அதே ஓவரில் ரெய்னாவையும் வீழ்த்தினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தோனி இந்த ஆட்டத்திலும் சோபிக்கவில்லை. இறுதியாக சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில், ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை சேர்த்தது.
189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணிக்காக, ஜோஸ் பட்லரும், மனன் வோராவும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 3.5ஆவது ஓவரில் அணியின் ஸ்கோர் 30ஆக இருந்தபோது சாம் கரன் பந்துவீச்சில் வோரா, 14 ரன்களில் ரவீந்திர ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு அதிரடி காட்டிய பட்லர், தீபக் சஹார் வீசிய ஐந்தாவது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரியும், இரண்டாவது பந்தில் சிக்ஸரும் பறக்கவிட்டார். இதற்கிடையே, களமிறங்கிய அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் ஆறாவது ஓவரில் சாம் கரனிடம் வீழ்ந்தார்.
தொடர்ந்து ஷிவம் தூபேவுடன் ஜோடி சேர்ந்த பட்லர், ஜடேஜா வீசிய எட்டாவது ஓவரில் இரண்டு பவுண்டரிகளை விளாசினார். அணியை வெற்றி பெற செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட பட்லர் ஜடேஜா வீசிய 12ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் ஷிவம் தூபேவும் வீழ்ந்தார்.
இதனால் ராஜஸ்தான் அணியின் ஒட்டுமொத்த சுமையும் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் மில்லர் பேட்டில் இறங்கியது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அவர் மொயின் அலி பந்துவீச்சில் இரண்டு ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் அந்த அணியின் வெற்றியும் கேள்விக்குறியாகியது.
அதன் பிறகு களத்திற்கு வந்த ராஜஸ்தான் அணி வீரர்களால் சென்னை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை. இறுதியாக அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதனால், சென்னை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணி தரப்பில், மொயின் அலி மூன்று விக்கெட்டுகளையும், சாம் கரன், ரவீந்திர ஜடேஜா தலா இரண்டு விக்கெட்டுகளையும் எடுத்தனர். ஜடேஜா நான்கு கேட்சுகளையும் பிடித்தார். ஆட்டநாயகனாக மொயின் அலி தேர்ந்தெடுக்கப்பட்டர்.