அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான மும்பையை எதிர்த்து பஞ்சாப் களம்கண்டது. டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் கே.எல். ராகுல், பீல்டிங்கைத் தேர்வுசெய்தார்.
முதலில் ஆடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 191 ரன்களைக் குவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் ரோகித் சர்மா 45 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பொல்லார்டு 20 பந்துகளில் 47 ரன்னும், பாண்டியா 11 பந்துகளில் 30 ரன்னும் எடுத்து கடைசிவரை அவுட் ஆகாமல் களத்தில் நின்றனர்.
இஷான் கிஷன் 28 ரன்னும், சூர்ய குமார் 10 ரன்னும் எடுத்திருந்தனர். குவின்டன் டிகாக் டக்-அவுட் ஆகியிருந்தார். பஞ்சாப் தரப்பில் ஷெல்டன், முகமது ஷமி, கிருஷ்ணப்பா கௌதம் தலா ஒரு விக்கெட் எடுத்திருந்தனர்.
இந்நிலையில், 120 பந்துகளில் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கே.எல். ராகுல் 19 பந்துகளில் 17 ரன்னும், மயங்க் அகர்வால் 18 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 25 ரன்னும், கருண் நாயர் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆனார்கள்.
நிதானமாக நின்று அடித்து ஆடிய நிக்கோலஸ் பூரண் 27 பந்துகளில் 44 ரன்கள் குவித்தார். இதில் 2 பவுண்டரி, 2 சிக்சரும் அடங்கும்.
அடுத்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிளீன் மேக்ஸ்வெல் 11 ரன்னில் அவுட் ஆனார். இதனால் பஞ்சாப் அணி தோல்வியைத் தவிர்க்க போராடியது.
அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. மும்பை 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.