ஐபிஎல் தொடரின் இன்றைய (அக்.26) 46ஆவது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய கேகேஆர் அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இயன் மோர்கன் - சுப்மன் கில் இணை அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் அதிரடியாக விளையாடிய சுப்மன் கில் அரைசதம் கடந்து அசத்தினார்.
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் கேகேஆர் அணி ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சுப்மன் கில் 57 ரன்களையும், இயன் மோர்கன் 40 ரன்களையும் எடுத்தனர்.
இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு கே.எல்.ராகுல் - மந்தீப் சிங் இணை சிறப்பான தொடக்கத்தை தந்தது. இதில் கே.எல்.ராகுல் 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
பின்னர் மந்தீப் சிங்குடன் ஜோடி சேர்ந்த கிறிஸ் கெய்ல், வழக்கம் போல மைதானத்தில் வானவேடிக்கை காட்டினார். சிறப்பாக விளையாடி வந்த மந்தீப் சிங், ஐபிஎல் தொடரில் தனது ஆறாவது அரைசதத்தைக் கடந்து அசத்தினார்.
மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கிறிஸ் கெய்ல், ஐபிஎல் தொடரில் தனது 30ஆவது அரைசதத்தைப் பதிவு செய்தார்.
இதனால் 18.5 ஓவர்களில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
அந்த அணியில் அதிகபட்சமாக கிறிஸ் கெய்ல் 51 ரன்களையும், மந்தீப் சிங் 66 ரன்களையும் எடுத்தனர்.
இதையும் படிங்க: ஆஸ்திரேலியத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!