ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் லீக் போட்டிகள் பரபரப்புக்குப் பஞ்சமின்றி ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்திசெய்துள்ளது.
இது ஒருபுறமிருக்க, வழக்கம்போல சீசனுக்கு நான்கு பந்துவீச்சாளர்கள் ரன்களை வழங்குவதுபோல், நடப்புச் சீசனிலும் சில தாராள மனம் படைத்த பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
சித்தார்த் கவுல் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)
அந்த வரிசையில் முதலிடத்தைப் பிடித்திருப்பது ஹைதராபாத் அணியின் சித்தார்த் கவுல். ஒவ்வொரு சீசனிலும் பந்துவீச்சைப் பலமாகக் கொண்டு களமிறங்கும் ஹைதராபாத் அணிக்கு, நடப்புச் சீசன் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
அதிலும் அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர் சித்தார்த் கவுல், மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் நான்கு ஓவர்களை வீசி 64 ரன்களைக் கொடுத்திருந்தார். இது இந்தச் சீசனில் ஒரு பந்துவீச்சாளர் கொடுத்த அதிகபட்ச ரன்னாகவும் பதிவாகியுள்ளது.
அங்கித் ராஜ்புட் (ராஜஸ்தான் ராயல்ஸ்)
இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருப்பவர் ராஜஸ்தான் அணியின் அங்கித் ராஜ்புட். நேற்று நடைபெற்ற மும்பை அணிக்கெதிரான போட்டியில் பந்துவீசிய ராஜ்புட், நான்கு ஓவர்களில் 60 ரன்களைக் கொடுத்தார்.
இருப்பினும் பென் ஸ்டோக்ஸின் அதிரடியான சதத்தால் ராஜஸ்தான் அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.
டேல் ஸ்டெயின் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)
வேகப்புயல் டேல் ஸ்டெயின் இப்பட்டியலில் இடம்பெற்றிருப்பது ரசிகர்களுக்கு சிறிது ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆர்சிபி அணிக்காக விளையாடிவரும் ஸ்டெயின், பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியின்போது நான்கு ஓவர்களில் 57 ரன்களைக் கொடுத்திருந்தார்.
இதன் காரணமாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அன்றையப் போட்டியில் 207 ரன்களை இலக்காக நிர்ணயித்தது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ் ஜோர்டன் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்)
கடந்த சில போட்டிகளில் பஞ்சாப் அணியின் நம்பிக்கை நாயகனாகத் திகழும் கிறிஸ் ஜோர்டன், இப்பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணி விளையாடிய முதல் போட்டியிலேயே கிறிஸ் ஜோர்டன், நான்கு ஓவர்களை வீசி 56 ரன்களைக் கொடுத்திருந்தார்.
இருப்பினும் ஜோர்டன் தற்போது சூப்பர் ஓவரில் அணிக்கு வெற்றியைத் தேடித்தரும் அளவிற்கு வந்துள்ளது ரசிகர்களுக்குப் பெருமகிழ்ச்சியை அளித்துள்ளது.
லுங்கி இங்கிடி (சென்னை சூப்பர் கிங்ஸ்)
இப்பட்டியலில் ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளவர் சிஎஸ்கே அணியின் லுங்கி இங்கிடி. நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு சிஎஸ்கே அணி தகுதிபெறாமல் இருந்ததற்கு இவரும் ஒரு காரணம்.
வேகப்பந்துவீச்சில் அணிக்கு கைக்கொடுக்க வேண்டிய இங்கிடி, சீசனின் இரண்டாவது போட்டியிலேயே 56 ரன்களை வாரி வழங்கியிருந்தார். இதனால் அடுத்தடுத்து போட்டிகளில் இங்கிடிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கால்பந்து வீரர் ரொனால்டினோவிற்கு கரோனா