ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு சற்றும் பஞ்சமின்றி, ஐபிஎல் தொடரின் 13ஆவாது சீசன் விருந்து படைத்துவருகிறது. இதில் இன்று நடைபெறும் 34ஆவது லீக் ஆட்டத்தில் எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதவுள்ளது.
சார்ஜா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. நடப்பு ஐபிஎல் சீசனில் இதற்கு முன்னதாக இவ்விரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் டெல்லி அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.
இதனால் முந்தைய போட்டியில் அடைந்த தோல்விக்குப் பதிலடி கொடுக்கும் முனைப்பில் சென்னை அணி செயல்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு சீசனில் ஒருசில போட்டிகளில் சொதப்பி தோல்வியைத் தழுவியது. இருந்தபோதும் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் மீண்டும் வெற்றியைப் பெற்று, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்டது.
வழக்கமாக வாட்சன், டூ பிளேசிஸ், ராயுடு என சீனியர் வீரர்களை தொடக்க ஆட்டக்காரர்களாக கண்ட சிஎஸ்கே ரசிகர்களுக்கு, ‘குட்டிக் குழந்தை’ சாம் கர்ரனை தொடக்க வீரராக களமிறக்கியது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இனிவரும் போட்டிகளிலும் சிஎஸ்கே அணியின் முடிவுகள் வெற்றியை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். ஏனெனில் இனிவரும் போட்டிகளில் சென்னை அணி வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பதால், ஒவ்வொரு போட்டியில் சென்னை அணியின் ஆட்டத்தை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
டெல்லி கேப்பிட்டல்ஸ்:
ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, நடப்பு சீசனில் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறது. அதிக இளம் வீரர்களைக் கொண்ட டெல்லி அணிக்கு பிரித்வி ஷா, ரிஷப் பந்த், ஹெட்மையர் என நம்பிக்கையளித்து வருகின்றனர்.
மார்கஸ் ஸ்டோய்னிஸ், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தொடர்ந்து ஆல்ரவுண்டர் வரிசையில் அணியின் வெற்றியை உறுதிசெய்து வருகின்றனர். காகிசோ ரபாடா, ஆண்ட்ரிச் நோர்ட்ஜே ஆகியோர் வேகப்பந்துவீச்சில் மிரட்டிவருவதாலும் டெல்லி அணி இந்த சீசனில் தனது அசுர வளர்ச்சியை வெளிப்படுத்திவருகிறது.
இதனால் ஏறத்தாழ பிளே ஆஃப் சுற்றை உறுதிசெய்துள்ள டெல்லி அணி, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியாக இனிவரும் போட்டிகளில் செயல்படும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
உத்தேச அணி:
சென்னை: ஷேன் வாட்சன், பாப் டூ பிளசிஸ், அம்பத்தி ராயுடு, மகேந்திர சிங் தோனி (கேப்டன்), டுவைன் பிராவோ, சாம் கர்ரன், ரவீந்திர ஜடேஜா, தீபக் சஹார், பியூஷ் சாவ்லா, கரன் சர்மா, ஷர்துல் தாக்கூர்.
டெல்லி: ஷிகர் தவான், பிருத்வி ஷா, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அஜிங்கே ரஹானே, அலெக்ஸ் கேரி, மார்கஸ் ஸ்டோனிஸ், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல், அன்ரிச் நோர்ட்ஜே, துஷார் தேஷ்பாண்டே, ககிசோ ரபாடா.
இதையும் படிங்க:ஐபிஎல் 2020 : விக்கெட்டில் அரைசதம் அடித்த ட்ரெண்ட் போல்ட்