ஐக்கிய அரபு அமீரகத்தில் 13ஆவது சீசன் ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று(செப்.20) நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது.
இதில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய டெல்லி அணிக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் ஷிகர் தவான் ரன் ஏதுமின்றியும், ப்ரித்வி ஷா 5 ரன்களுடனும், ஷிம்ரான் ஹெட்மையர் 7 ரன்களிலும் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர்.
அதைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் - ரிஷப் பந்து இணை சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரிஷப் பந்த் 31 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 39 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
இறுதியில் அதிரடி காட்டிய மார்கஸ் ஸ்டோய்னிஸ், எதிரணி பந்துவீச்சை பவுண்டரிகளாக விளாசி அசத்தினார். இதன் மூலம் 20 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.
இதன்மூலம் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் 51 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 39 ரன்களையும் எடுத்திருந்தனர். பஞ்சாப் அணி தரப்பில் முகமது சமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதனையடுத்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி விளையாடி வருகிறது.
இதையும் படிங்க:ஐபிஎல் 2020: தொட்டதும் வெற்றி - சிஎஸ்கேவின் அதிரடி ஆரம்பம்!